சென்னை:மின் கட்டண உயர்வை கண்டித்துபாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனொரு பகுதியாக சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக மாநில செயலாளர் வினோஜ் செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வினோஜ் செல்வம் கூறுகையில், "இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் போல திமுக ஆட்சி செய்து வருகிறது. ஆவின் நிறுவனம் மூலம் மக்களுக்கு சத்தான பொருள்களை வழங்காமல், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. பள்ளிக்கல்வித்துறை பொறுத்தவரை 650 அரசு பள்ளிகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் சேர்க்கை உள்ளது. G square நிறுவனம் மட்டுமே மாநிலத்தில் சந்தோஷமாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது.
அலிபாபாவும் 40 திருடர்களும் போல 33 அமைச்சர்களும் ஸ்டாலினும் என்ற படமே எடுக்கலாம். 5% வரிவிதித்த பிறகு 200 மில்லி லிட்டர் தயிர் பாக்கெட் 24 ரூபாய் இருக்க கூடிய நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 28 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
டெல்லியில் உள்ள ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு சென்ற தமிழ்நாடு நிதியமைச்சர் தயிர், அரிசி போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்று கூறிவிட்டு, அதன் பின்னர் தமிழ்நாடு திரும்பிய உடனே முதலை கண்ணீர் வடிக்கிறார். பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல், டீசல் விலை குறைக்கவும் இல்லை. சிலிண்டருக்கான மானியம் 100 ரூபாய் இதுவரை வழங்கவில்லை.
தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கிவிட்டு, அதை சமாளிக்க முடியாமலேயே மின் கட்டணத்தை அரசு உயர்த்தி உள்ளது. இது மக்கள் விரோத செயல். மின்சாரத் துறையில் திமுக ஆட்சி பொறுப்புயேற்றதிலிருந்து எந்த விதமான வரியும் மத்திய அரசுக்கு கட்டவில்லை. தற்போது மத்திய அரசு இதுகுறித்து கேட்கும் போது திமுக அரசு மின் கட்டண உயர்வை அமல்படுத்தி அதை சரி செய்யும் நடவடிக்கை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது.
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருந்தது. இதுவே திமுக அரசு சொல்லியது போல, பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியில் செய்ய இயலாததை திமுக அரசு ஓராண்டில் செய்து முடித்துவிட்டது என்பது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் வருகை