சென்னை:முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாள், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியால் இன்று முதல் அடுத்த 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது.
காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்து, 2006ஆம் ஆண்டில் அரசாணை வெளியிட்டவர், முதலமைச்சர் கருணாநிதி. காமராஜருக்கு சென்னை, கன்னியாகுமரியில் நினைவிடம் கட்டியது, காமராஜர் சாலை என பெயர் வைத்தது, விமான நிலையத்துக்கு காமராஜர் பெயர் வைத்தது என்று அனைத்து பெருமையும் கருணாநிதியையே சேரும்” எனக் கூறினார்.
இதனையடுத்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “மாணவர்களின் வாழ்த்துகளால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார். குலக்கல்வியை எதிர்த்ததால் தான் காமராஜர் முதலமைச்சரானார். பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அதற்கான அடித்தளமிட்டு, கல்வியில் தனிக்கவனம் செலுத்தியவர் காமராஜர்.
NEP என்றால் No Education Policy. எனவே தான் State Education Policy-ஐ மாநில அரசு வடிவமைத்து வருவதாகவும், நமக்கான கல்வியை நாமே உருவாக்கிக்கொள்வோம்” எனக் கூறினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குணமடைந்து வீடு திரும்பிய உடன், பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் ஆகியவற்றைத் தொடங்கி வைப்பார்.