சென்னை:சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் தேர்தலில் தகுதியானவர்களை நீக்கி உள்ளதாகக் கூறி பேராசிரியர்கள் திடீர் உள்ளிருப்புப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலளார் தாமோதரன் கூறும்போது, ”சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட்டில் சுயநிதி கல்லூரிகளின் முதல்வர்களுக்கான பிரிவில் காலியாக உள்ள 4 இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.
சுயநிதிக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் முதல்வர்கள் சிண்டிகேட் உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். 4 இடங்களுக்கு 8 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்த நிலையில், இருவரின் வேட்புமனுக்களை தள்ளுபடி செய்து துணைவேந்தர் கௌரி 13ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டார்.
உரிய தகுதியிருந்தும், வேட்புமனுக்களை திடீரென நிராகரித்து, தங்களுக்கு வேண்டிய நபர்களை சிண்டிகேட் உறுப்பினர்களாக தேர்வு செய்ய துணைவேந்தரும், பதிவாளரும் முயற்சிக்கின்றனர். இருவரின் வேட்புமனுக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் பல்கலைக் கழக மானியக்குழுவின் விதிகளின் படி சம்பளம் வழங்கப்படவில்லை என்பது குறித்தும் தனியாக பேசுவோம்” எனக் கூறினர்.
தனியார் கல்லூரிகளில் பல்கலைக்கழக மானியக்குழுவின் சம்பளம் வழங்கப்படுவதில்லை - துணைவேந்தர் கெளரி இது குறித்து சென்னைப்பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி கூறும்போது, ”பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சுழற்சி முறையில் சிண்டிகேட்டுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் பணியாற்றும் முதல்வர்கள் தேர்தலில் போட்டியிட்டு சிண்டிகேட்டுக்கு தேர்வாகும் நடைமுறை பல ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது.
பல தனியார் கல்லூரிகளில் பல்கலைக்கழகம் நிர்ணயித்த ஊதியத்தை பேராசிரியர்களுக்கு முறையாக வழங்குவதில்லை. சொற்ப அளவிலேயே ஊதியம் வழங்கி வருகின்றனர். பல்கலைக்கழக விதிகளின்படி முறையான ஊதியம் பெறாத தனியார் கல்லூரி முதல்வர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் பட்டியலில் வருவதால், அவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன” எனக் கூறினார்.
மேலும், ”தகுதியுடையவர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 4 இடங்களுக்கு 6 பேர் போட்டியில் இருக்கின்றனர். சிண்டிகேட் உறுப்பினர்களுக்கான தேர்தல் கட்டாயம் நியாயமான முறையில் நடைபெறும். சிண்டிகேட் தேர்தலில் இருவரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் எந்த தவறும் நடைபெறவில்லை .
மேலும் 2 பேரும் பல்கலைக் கழக விதிகளின்படி ஒரு மாதத்திற்கான சம்பளம் பெற்றதற்கான பட்டியல் மட்டுமே வைத்துள்ளனர். இவர்கள் கவுரவ முதல்வர்களாகவே செயல்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக அலுவலகம் சூறையாடல் விவகாரம் - அலுவலக மேலாளர் நேரில் விளக்கம்