பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் நேரில் ஆஜராக சென்னை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சென்னை கே.கே. நகரில் இயங்கி வரக்கூடிய பத்மசேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்தப் பள்ளியின் ஆசிரியரான ராஜகோபாலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே ராஜகோபாலனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
பிஎஸ்பிபி பள்ளியின் முதல்வர், தாளாளருக்கு சம்மன் - PSSB SCHOOL CONTROVERSY
19:07 May 26
அதனடிப்படையில் சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சூரியகலா பள்ளிக்குச் சென்று விவரங்களை சேகரிக்க முயன்றபோது பள்ளி நிர்வாகம் போதுமான ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் பள்ளி மாணவிகள் பாதிப்பு குறித்து விவரங்களைச் சேகரித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு அனுப்பப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் பத்மசேஷாத்ரி பள்ளியின் முதல்வர் மற்றும் பள்ளியின் தாளாளர் வருகிற 31ஆம் தேதி காலை 11 மணிக்குள் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் சம்மன் அனுப்பியுள்ளனர். பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் சென்னை மாவட்ட குழந்தைகள் நலக்குழு தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பிஎஸ்பிபி பள்ளி முதல்வரிடம் இரண்டாவது முறையாக இன்று விசாரணை!