காவலர் லோகேஷ் இறப்பதற்கு முன்பு வெளியிட்ட ஆடியோ சென்னை: ராயபுரம் காவல் குடியிருப்பில் வசித்து வந்தவர் லோகேஷ்(38). இவரது மனைவி ஷாலினி. இவர்களுக்கு அபிஷேக், ஹாஷிகா என இரு குழந்தைகள் உள்ளனர். முதல் நிலை காவலரான லோகேஷ், கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அமைந்தகரை, மணலி உள்பட பல காவல் நிலையங்களில் பணியாற்றி, சமீபகாலமாக கோட்டை காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லோகேஷிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவ விடுப்பில் இருந்து வந்துள்ளார். பல மாதங்களாக மருத்துவ விடுப்பில் லோகேஷ் இருந்ததால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவரை பிளாக் மார்க் செய்து பெரவள்ளூர் காவல் நிலையம் குற்றப்பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
உடல் நலக்குறைவு பிரச்சினையில் இருந்த நிலையில், பிளாக் மார்க் செய்யப்பட்டதால் லோகேஷ் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் லோகேஷிற்கு ரத்த கொதிப்பு பிரச்சனை இருப்பதால், உடனடியாக பணியிட மாறுதலை ரத்து செய்து வடக்கு மண்டலத்தில் பணியிடம் ஒதுக்கி உத்தரவிட வேண்டும் என டிஜிபிக்கு லோகேஷின் மனைவி ஷாலினி மனு அளித்துள்ளார்.
உதவி ஆணையர் மற்றும் காவலரின் சித்திரவதையால் ஆடியோ வெளியிட்டு காவலர் தற்கொலை இந்த நிலையில் நேற்றிரவு வீட்டின் கழிவறைக்கு சென்ற லோகேஷ் நீண்ட நேரமாக வெளியே வராததால், அவரது மகள் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே பார்த்துள்ளார். அப்போது மயக்கமடைந்த நிலையில் லோகேஷ் கிடந்ததாக கூறப்படுகிறது. அவரை பரிசோதித்ததில் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இறப்பதற்கு முன்னதாக காவலர் லோகேஷ், துணை ஆணையருக்கு பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் கோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் உதவி ஆணையர் சம்பத் பாலன் ஆகியோர் தொடர்ந்து லஞ்சம் வாங்கி வருவதாகவும், சமீபத்தில் 100 லிட்டர் டீசலை திருடி கொடுக்குமாறு ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையர் கூறியதை தான் மறுத்ததால் பழிவாங்கும் நோக்கில் தன்னை பணியிட மாற்றம் செய்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.
ஒரு மாதத்திற்கு உதவி ஆணையர் ஐந்து லட்சம் ரூபாயும், காவல் ஆய்வாளர் ஒன்றரை லட்சம் ரூபாயும் லஞ்சம் பெறுவதாக குற்றம் சுமத்தியுள்ளார். இது மட்டுமின்றி இ - சலான் மிஷினில் பல முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார். உடனடியாக பணியிட மாறுதலாகி செல்லுமாறு தினமும் வீட்டிற்கு காவலர்களை அனுப்பி மன உளைச்சலை ஏற்படுத்துவதால், தான் குடும்பத்துடன் சென்று தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என கண்ணீருடன் ஆடியோவில் பேசியுள்ளார். இந்த ஆடியோ தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சியில் சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது ரூ.1,36,000 அபராதம்!