புதுச்சேரி:புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் கோகிலாம்பிகை உடனுறை அருள்மிகு திருக்காமேஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க வரும் பொழுது துணைநிலை ஆளுநர் தமிழிசையுடன் முதலமைச்சர் ரங்கசாமி உடன் வருகிறார்.
அப்பொழுது நமச்சிவாயம் சற்று பின்னோக்கி வருகிறார். அவருக்கு வழிவிடும் விதமாக நமச்சிவாயத்தின் பாதுகாவலர் ராஜசேகர் என்பவர் முதலமைச்சர் ரங்கசாமியை இடது கையால் தள்ளி விடுகிறார். இதனால் நிலை தடுமாறி பின்னோக்கி செல்லும் முதலமைச்சர் ரங்கசாமி சுதாரித்துக் கொள்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது. மேலும், இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகள் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையை இன்று(ஜூன் 14) புதுச்சேரி காவல் துறை தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. காவல் துறை தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உள்துறை அமைச்சரின் பாதுகாப்பு அலுவலர் எஸ்.ஐ. ராஜசேகர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:புதுச்சேரி முதலமைச்சரை தள்ளிய காவலரால் பரபரப்பு!