சென்னை: சென்னையில் பொதுமக்களை ஏமாற்றி ரூ.4 கோடி மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். வேளச்சேரியில் இயங்கி வரும் டெக்டில்ட் இன்போ சொலியூஷன்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குநர் லட்சுமி நாராயணன்(37). இவர் எஸ்.எல்.என் எண்டர்பிரைசஸ், ஸ்ரீ சாய் பாலாஜி என்ற டிரேடிங் கம்பெனிகளை நடத்தி வந்துள்ளார். இவர் தனது டிரேடிங் கம்பெனிகளில் முதலீடு செய்தால் 1.5 சதவீதம் லாபத்தொகை தருவதாக மக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி நம்பவைத்துள்ளார்.
பின் அவர்களிடமிருந்து ஆவணங்களைப் பெற்று அதன் மூலம் அப்ளிகேஷன் படிவத்தில் அவர்களுடைய கையெழுத்துக்களை போலியாக பதிவிட்டு அந்த ஆவணங்களை பல்வேறு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிலும் கொடுத்து ரூ.1.8 கோடி வரை மோசடியாக கடன் பெற்றுள்ளார்.
இதையடுத்து அவருடைய நிறுவனங்களின் வங்கி கணக்குகளின் மூலம் பணத்தைப் பெற்றுகொண்டு பின்பு சொன்னபடி வங்கிகளில் ஈ.எம்.ஐ கட்டாமலும், எந்தவித பணமும் கொடுக்காமலும் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சென்னையை சேர்ந்த அஸ்வின் குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தலைமறைவாக இருந்த லட்சுமி நாராயணனை வலைவீசித் தேடிவந்தனர். இதனிடையே, அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (ஜூலை 13) கைது செய்தனர்.