சென்னை: எல்லாம் அவன் செயல், அவன் இவன், ஜில்லா உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் ஆர்கே என்கிற ராதாகிருஷ்ணா. இயக்குனரும், தயாரிப்பாளரும், தொழிலதிபருமான ராதாகிருஷ்ணா நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி பகுதியில் அமைந்துள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த பத்தாம் தேதி ஆர்.கே.வின் மனைவி ராஜி வீட்டில் தனியாக இருந்தபோது ஒரு கும்பல் புகுந்து ராஜியை கட்டிப்போட்டு, வாயில் பிளாஸ்டர் ஒட்டி, கத்தியை காட்டி மிரட்டி பீரோவில் இருந்த 228 சவரன் நகை மற்றும் இரண்டு லட்சம் பணம் மற்றும் 2 விலை உயர்ந்த கடிகாரங்களைக் கொள்ளையடித்துச் சென்றது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஆர்.கே அளித்த புகாரின் பேரில் நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஆர்.கே வீட்டில் காவலாளியாக வேலை பார்த்த நேபாளத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் கொள்ளையடிப்பதற்குப் பல மணி நேரத்திற்கு முன்னதாகவே ஆட்டோவில் வந்த நேபாள கும்பல் ஆர்.கே வீட்டின் பின்புறத்தில் நுழைந்து, பின்னர் வீட்டில் அனைவரும் சென்ற பிறகு பின் வழியாக நுழைந்து ராஜியை கட்டிப்போட்டு பணம் மற்றும் நகையைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.
மேலும் கொள்ளையடித்த பணத்தை இரண்டாகப் பிரித்து மூட்டையில் கட்டிக் கொண்டு ஒரு கும்பல் வேலூர் வழியாகவும், மற்றொரு கும்பல் மும்பை வழியாகவும் நேபாள நாட்டிற்குத் தப்பிச் சென்றதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. கொள்ளையடித்துவிட்டுத் தப்பி ஓடிய கும்பலைப் பிடிக்க எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் செல்போன் சிக்னல் மற்றும் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் நேபாளத்திற்கு தப்பிச்சென்ற முக்கிய நபர் உட்பட மூன்று கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்கள் அளித்த தகவலின் பேரில் மேலும் ஐந்து நபர்களை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவர்கள் நேபாள நாட்டை சேர்ந்த காவலாளி ரமேஷ், கரன் கத்திரி, புஷ்கர் சாவுத், பிஸ்னு சாவுத், சங்கர் பிரகாஷ் ஜெய்சி, அவரது மனைவி துர்கா ஜெய்சி, பன்சோலிம்பு, பதம் சாவுத் ஆகிய 8 பேர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் சுவாரஸ்ய தகவல் வெளியானது.
கைது செய்யப்பட்ட அனைவருமே நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் அனைவரும் சென்னைக்கு வந்து பல இடங்களில் பிரிந்து குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. வேலை முடிந்த பின்பு இவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம், அதேபோல கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மது அருந்தும் போது எவ்வளவு நாட்கள் இப்படியே வாழுறது, என புலம்பி உள்ளனர்.
அப்போது ஆர்.கே வீட்டுக் காவலாளியான ரமேஷ் அனைவரிடமும் ஒரு திட்டத்தைத் தெரிவித்துள்ளார். அதாவது நடிகர் ஆர்.கே அவரது மகள் திருமணத்திற்காக நகைகள் மற்றும் பணம் சேர்த்து வைத்திருப்பதாகவும், அதைக் கொள்ளை அடித்தால் ஒரே நாளில் அனைவரும் செட்டில் ஆகிவிடலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அனைவரும் கடந்த ஒரு மாதங்களாகக் கொள்ளையடிப்பது குறித்த திட்டம் தீட்டியுள்ளனர். இந்தத் திட்டத்திற்காக நேபாளத்திலிருந்து இரண்டு நபர்களையும் வரவழைத்துள்ளனர். குறிப்பாக ஆர்.கே வீடு அமைந்துள்ள பகுதி வெறிச்சோடி காணப்படுவதால், எளிதாக ஆட்டோவில் வந்த ஆறு பேர் பின்புறமாகச் சென்றதாகவும், ஒரு கும்பல் வெளியே இருந்து நோட்டம் விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அனைவரும் சென்று பின் வழியாக வீட்டிற்குள் நுழைந்து ஆர்.கேவின் மனைவியைக் கட்டிப்போட்டு 20 நிமிடத்தில் பீரோவில் இருந்த மொத்த நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு மூட்டை கட்டி தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தை வைத்து நேபாளத்திற்கு சென்று சொகுசாக வாழ ஆசைப்பட்ட போது போலீசார் குறுக்கிட்டு கைது செய்துவிட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து கொள்ளையடித்த 120 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், மீதமுள்ள 4 நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரே நாளில் பணக்காரனாக ஆசைப்பட்டு மொத்த வாழ்க்கையையும் தொலைத்த 8 பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வருகிற 9 ஆம் தேதி வரை சிறையில் அடைத்தனர்.
நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு நகை, பணத்தை நண்பர்களுடன் இணைந்து கொள்ளையடித்த காவலாளி இதையும் படிங்க:பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் 15 கிலோ தங்கம் கொள்ளை