சென்னை:ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 168 பயணிகளுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் கீழே இறங்கத் தொடங்கினர்.
அப்போது அந்த விமானத்தில் பயணித்து வந்த சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த பயணி தனசேகர் (38) மட்டும் கீழே இறங்காமல் விமான இருக்கையிலேயே தலையை சாய்த்து தூங்குவது போல் அமர்ந்திருந்தார்.
இதையடுத்து விமான பணிப்பெண் தனசேகரிடம் சென்னை வந்துவிட்டது. விமானத்தை விட்டு கீழே இறங்குங்கள் என்று கூறினர். ஆனால் தனசேகரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து சக பணிப்பெண்கள் வந்து பார்த்துவிட்டுப் பயணி தனசேகர் மயக்க நிலையில் இருப்பதாக விமானத்தின் தலைமை விமானிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தலைமை விமானி சென்னை சர்வதேச விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தார்.
சென்னை விமான நிலைய மருத்துவக் குழுவினர் விமானத்திற்குள் வந்து பயணி தனசேகரை பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திடீரென ஏற்பட்ட கடுமையான மாரடைப்பால் பயணி தனசேகர் உயிரிழந்ததாக அறிவித்தனர்.