சென்னை: விமான நிலையத்தில் ரூபாய் 250 கோடி செலவில் 3.36 லட்சம் சதுர அடி பரப்பில் 6 அடுக்கு மாடிகளுடன் கூடிய அதி நவீன மால்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காா் பாா்க்கிங்கில் சுமாா் 2 ஆயிரம் காா்களை நிறுத்த முடியும். இந்த கார் பார்க்கிங் பணி இந்த ஆண்டு தொடக்கத்திலேயே நிறைவடைந்தது. எனவே கடந்த ஜனவரி மாத கடைசியில் இருந்து இன்னும் ஒரு மாதத்தில் புதிய நவீன கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வரும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துக் கொண்டே இருந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஜுலை மாதம் 9ஆம் தேதி இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், மல்டி லெவல் காா் பாா்க்கிங்கில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டன. இந்த அதிநவீன ஆறடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் 2022 ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவித்தனர்.
அதோடு இந்த கார் பார்க்கிங்கில் மின்சார வாகனங்களையும் நிறுத்தலாம் அந்த மின்சார வாகனங்களுக்கு இங்கேயே மின்சக்தி சாா்ஜ் செய்து கொள்ளலாம். அதை இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொண்டு அதற்கான கட்டணத்தையும் செலுத்தி கொள்ளலாம் என்று அறிவித்தனர்.
இந்த அதிநவீன மல்டி லெவல் கார்பாா்க்கிங்கில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களை நிறுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் சென்னை விமான நிலைய பயணிகள் இனி வாகன நெரிசல்கள் இருக்காது என்று நிம்மதியடைந்தனா். ஆனால் அறிவித்தப்படி ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து கார் பாா்க்கிங் செயல்பாட்டுக்கு வரவில்லை.
இதுகுறித்து விமானநிலைய அதிகாரி ஒருவர் இந்த கார் பார்க்கிங்கிற்கு தீயணைப்பு துறை தடையில்லா சான்று வரவில்லை. அதோடு ஏற்கனவே உள்ள பழைய கார் பாா்க்கிங் ஊழியா்கள் தொடா்ந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. எனவே கார் பாா்க்கிங் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என்று தெறிவித்தார்.
ஆனால் பணி முடிந்து 10 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை புதிய கார் பாா்க்கிங் திறக்கப்படாமல் மூடிக்கிடக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே சென்னை விமானநிலையத்தில் பயன்பாட்டில் இருக்கும் பழைய கார் பாா்க்கிங்கை பராமரிக்க தனியாா் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கும் பணியை இந்திய விமானநிலைய ஆணையம் தொடங்கியுள்ளது.