சென்னை:தமிழ்நாட்டில்ஏப்ரல், மே மாதங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு குறைத்துக் காட்டப்பட்டுள்ளது என அறப்போர் இயக்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கள நிலவரம்
கரோனா தொற்றால் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளதாக, அறப்போர் இயக்கத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வில், கரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையை, ஐசிஎம்ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்) விதிமுறைகளின் அடிப்படையில் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என தெரியவந்தது.
உயிரிழப்பு குறித்த தகவல்கள்
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் கரோனா தொற்றின் முதல் அலை குறையத் தொடங்கியது. மார்ச் 4ஆம் தேதி 482 என பதிவான தொற்று எண்ணிக்கை, மார்ச் 5ஆம் தேதி 562 என மீண்டும் ஏறுமுகமானது. அப்போது, தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 513 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.
கரோனா இரண்டாம் அலை
ஏப்ரல் மாதத்திற்கு பிறகு, கரோனா இரண்டாம் அலை பரவத் தொடங்கியது. மே 21ஆம் தேதி 36 ஆயிரத்து 184 என பதிவாகிய தொற்று எண்ணிக்கை, ஜூன் 14ஆம் தேதி 29 ஆயிரத்து 801 என பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக மே 30ஆம் தேதி 493 பேர் உயிரிழந்ததாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்தது. முதல் அலையை விட இரண்டாவது அலையில் உயிரிழப்பு அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுக்கைகள் பற்றாக்குறை
அதிகமானோருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டதால், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தடுப்பாடு ஏற்பட்டது. இதனால் சிலர் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பினால் ஏற்படும் மூச்சுத்திணறல், இணைநோய்கள் போன்றவற்றின் மூலமும் உயிரிழப்புகள் அதிகளவில் நிகழ்ந்தன.
அறப்போர் இயக்கம் ஆய்வு
தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அறப்போர் இயக்கம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
இது தொடர்பாக, அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் ஈடிவி பாரத் சார்பில் பேசினோம்.
கரோனா தொற்று இறப்பு மறைக்கப்பட்டதா?
”கரோனா தொற்றால் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்து காட்டியுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள், நண்பர்கள் அதிகளவில் இறந்ததை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அது குறித்து விவரம் இறப்பு அறிக்கையில் இடம் பெறவில்லை.
இதையடுத்து இறப்பு சான்றிதழ்களை மருத்துவமனைகளின் இணையதளத்தில் இருந்து சேகரிக்க முடிவு செய்தோம். மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், கரூர், திருப்பூர் , வேலூர் ஆகிய மருத்துவமனைகளின் இறப்பு சான்றிதழ்களை ஆய்வு செய்தோம். கரோனா இறப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டோம்.
குறைவாக பதிவான உயிரிழப்புகள்
- இந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 6ஆம் தேதி வரையில் கணக்கிடப்பட்ட இறப்பு எண்ணிக்கை, ஒரு மாதத்திற்கு 2 ஆயிரமாக இருந்தது.
- கடந்த ஆண்டுகளில் ஏப்ரல், மே மாதங்களிலும் இறப்பு 2 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்தது. ஆனால் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3009 எனவும், மே மாதம் 8 ஆயிரத்து 690 எனவும் உயர்ந்துள்ளது.
- ஆய்வுக்காக தேர்வு செய்த 6 மருத்துவமனைகளில் ஏப்ரல், மே மாதங்களில் இறப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 699 என பதிவாகியுள்ளது.
- தொற்று இல்லாத ஆண்டான 2019இன் ஏப்ரல், மே மாதங்களின் இறப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, கரோனா பாதிப்பு பேரிடர் காலத்தில் இறப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 262 அதிகமாக உள்ளது.
அறப்போர் இயக்கம் ஆய்வில் அதிர்ச்சி தகவல் - கடந்த 2020ஆம் ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 8 ஆயிரத்து 438 அதிகமாக உள்ளது.
- ஆய்வு நடத்திய மருத்துவமனைகளில் கரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை 7ஆயிரத்து 262 முதல் 8 ஆயிரத்து 438 வரை உள்ளது தெரியவந்தது. ஆனால் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 6 மருத்துவமனைகளில் ஏப்ரல் , மே மாதங்களில் 863 பேர் மட்டுமே (13.6.2021 வரை உள்ள தகவலின்படி ) உயிரிழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த 6 மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்களை விட, ஏறத்தாழ 13.7 மடங்கு இறப்பு அதிகமாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 8.4 முதல் 9.8 மடங்கு குறைவாக பதிவாகி உள்ளதை கணக்கில் எடுத்துக் கொண்டால் , இறப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 870 என அரசு அறிவித்துள்ளதற்கு, மாற்றாக 1 லட்சத்து 26 ஆயிரத்து 126 என இருக்கக்கூடும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டவர்களுக்கு இறக்கும்போது நோய்த் தொற்று இல்லை என தெரிந்தாலும் கூட, அவர்களையும் கரோனா தொற்றால் உயிழந்தவர்களாகவே குறிப்பிட வேண்டும் எனவும், நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தும், கரோனா சந்தேகமாக இருப்பதாக தெரிந்தாலும், அவர்கள் இறக்கும் போதும் கரோனா தொற்று என இறப்பு சான்றிதழில் கூற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
நிவாரணம் பெறுவதில் எழும் சிக்கல்கள்
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி கிடைக்க, சரியான சான்றிதழ்களை அளிக்க வேண்டும். இந்நிலையில், மாநில அரசு உயிரிழப்பைக் குறைத்து காட்டினால், அதில் சிக்கல் எழும்.
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கரோனா இறப்பு சான்றிதழில் உள்ள குளறுபடிகளை களைவதற்கு குழு அமைத்து, அனைவரும் எளிதில் அணுகி பெறும் வகையிலும், இறப்புக்கான காரணத்தை பதிவு செய்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாட்டிலேயே முதன்முதலாக பச்சை பூஞ்சை நோயால் ஒருவர் பாதிப்பு