உலகையே அச்சுறுத்தி வரும் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்தை உலக நாடுகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அண்மையில், சென்னையில் கரோனா மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறிய போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கரோனா நோயைக் கட்டுப்படுத்துவற்கான மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், சென்னை தியாகராயநகர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ராஜ்குமார் மற்றும் பெருங்குடியைச் சேர்ந்த பார்மசிஸ்ட் வல்லுநர் சிவநேசன் (47) ஆகியோர் இணைந்து ஜி.என். செட்டி தெருவில் அமைந்துள்ள ராஜ்குமார் வீட்டில் உள்ள ஆய்வகத்தில் பணி செய்து வந்துள்ளனர்.
மருத்துவர் ராஜ்குமார் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காசிப்பூர் பகுதியில் சுஜாதா பயோடெக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன் தலைமை அலுவலகம், சென்னை கோடம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
மேற்கூறிய இருவரும் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கான மருந்துகளை ஆராய்ச்சி செய்து, அவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இந்தியாவில் மிகப்புகழ்பெற்ற இருமல் மருந்தான 'நிவாரண் 90' என்ற இருமல் மருந்தையும்; இந்தக் கம்பெனிதான் கண்டுபிடித்து விற்பனை செய்து வருகிறது. இதேபோன்று நினைவாற்றலைப் பெறுவதற்காக 'மெமரி பிளஸ்' எனும் மருந்து மாத்திரைகளை ஆய்வு செய்து அதையும் விற்பனை செய்து வருகின்றனர். இதேபோன்று 'வெல்வெட்டி' என்ற பெயரில் இயற்கை மருந்துகள் நிறைந்த தலைக்குப் போட்டு குளிக்கும் ஷாம்புவை கண்டுபிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.