தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையின் முக்கிய வீதியில் கத்தியுடன் பொதுமக்களை விரட்டிய கும்பல்

சென்னை அண்ணா நகரில் நள்ளிரவில் ரவுடிக்கும்பல் ஒன்று பட்டாக் கத்தியுடன் பொதுமக்களை விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 2, 2022, 4:05 PM IST

சென்னை: அண்ணா நகர் நான்காவது பிரதான சாலையில் உள்ள க்யூ பிளாக் பகுதியில் 'தி ஜாயின்ட்' என்ற ஜூஸ் கடை இயங்கி வருகிறது. நேற்று (டிச.01) நள்ளிரவு 11:30 மணியவில் இந்த கடைக்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஜூஸ் கேட்டுள்ளனர்.

கடைகளை மூடும் நேரம் என்பதால் இல்லை என்று கடையில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கடையில் பணிபுரியும் ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டினர்.

மேலும், கடையில் பணிபுரியும் ஊழியரையும் தாக்கினர். இந்த தகராறு சம்பவங்களைப் பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்களில் ஒருவர் அவர்களை தட்டிக்கேட்டார். அப்போது, ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் அவரை கத்தியால் வெட்ட முயன்று விரட்டியது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடமும் அக்கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களை வழிமறித்து கத்தியுடன் ரவுடி கும்பல் மிரட்டிவிட்டு, அங்கிருந்த கடை ஊழியரின் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து கடை ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் உடனடியாக அந்த கும்பல் திருடிச்சென்ற வாகனத்தை துரத்திச்சென்றனர்.

காவல் துறையினர் துரத்தி வருவதை அறிந்த அந்த கும்பல் திருவள்ளூர் சோழவரம் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு, தப்பிச்சென்றனர். இருசக்கர வாகனத்தை மீட்ட காவல் துறையினர், தப்பிச்சென்ற கும்பலைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

சிசிடிவி காட்சி

இந்தப் பகுதியில் நீதிபதிகள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அலுவலர்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு உணவகங்கள் மற்றும் முக்கிய தனியார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு செயல்பட்டு வரும் உணவகங்களில் பணிபுரியும் வடமாநிலப்பெண்கள் இரவு 11 மணியளவில் தங்களது தங்கும் பகுதிகளுக்குச் செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.

முக்கியப் பிரமுகர்கள் வசிக்கும் இப்பகுதி எப்போதுமே பரபரப்பாக இருக்கக்கூடிய நிலையில் ரவுடிக்கும்பல் ஒன்று பட்டாக் கத்தியுடன் மிரட்டிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதி மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அண்ணாநகர் காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:Paytm QR code வைத்து டிப்ஸ் வாங்கிய நீதிபதி உதவியாளர் சஸ்பெண்ட்

ABOUT THE AUTHOR

...view details