சென்னை:ஆயுர்வேத மருத்துவர்களும் அலோபதி சிகிச்சையை மேற்கொள்ளலாம் என்பதற்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பாணையில், ஆயுர்வேத மருத்துவர்கள் 60க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்ய அனுமதி அளித்திருந்தது. இதற்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் ராஜா செய்தியாளர்களை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, "ஆயுர்வேத மருத்துவம் படித்த மாணவர்கள் 60க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முறையான பயிற்சி இல்லாமல் ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் அது ஆபத்தை விளைவிக்கும்.
ஒரு முறையிலிருந்து இன்னொரு முறையில் பயின்றவர்கள் கலவை மருத்துவத்தை செய்யக்கூடாது. தற்போது உள்ள சூழலே தொடர வேண்டும். மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடைபெறும் அடையாள வேலைநிறுத்தமாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கரோனா தொற்று காலத்தில் நோயாளிகள் பாதிக்காதவாறு போராட்டத்தை நடத்தி வருகிறோம்.