தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம்; மருத்துவமனை ஸ்கேன் சென்டர் சீலை அகற்ற நீதிமன்றம் உத்தரவு! - மருத்துவமனை ஸ்கேன் சென்டர் சீலை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்ததாக எழுந்த புகாரில், ஈரோடு மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் உள்ளிட்ட உபகரணங்களுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமியிடம் கரு முட்டை எடுத்த விவகாரம்; மருத்துவமனை ஸ்கேன் சென்டர் சீலை அகற்ற நீதிமன்றம் உத்தரவு
சிறுமியிடம் கரு முட்டை எடுத்த விவகாரம்; மருத்துவமனை ஸ்கேன் சென்டர் சீலை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

By

Published : Jul 21, 2022, 5:23 PM IST

சென்னை: ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியிடம் பலமுறை கருமுட்டை எடுக்கப்பட்டு விற்பனை செய்த விவகாரத்தில், ஈரோட்டில் உள்ள சுதா மருத்துவமனை ஸ்கேன் மையங்களுக்கு அரசு அலுவலர்கள் ‘சீல்’ வைத்தனா். அத்துடன் மருத்துவமனையில் புதிய நோயாளிகளை சேர்க்கக்கூடாது எனவும், சிகிச்சைப்பெற்று வரும் உள் நோயாளிகளை 15 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டதுடன், கருத்தரித்தல் மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை எதிர்த்து ஈரோடு சுதா மருத்துவமனை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

மருத்துவமனையில் புதிய நோயாளிகளை சேர்க்கக் கூடாது எனவும், சிகிச்சைப்பெறும் நோயாளிகளை 15 நாளில் டிஸ்சார்ஜ் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், சட்டப்படி உரிய காரணங்களைத் தெரிவிக்காமல் மருத்துவக் கருவிகள் சீல் வைக்கப்பட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதனால் மருத்துவத்தொழிலை மேற்கொள்ள முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை தரப்பில், விதிகளை மீறி செயல்பட்ட மருத்துவமனை மீது பொதுநலன்கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், சட்டத்தில் அதற்கு இடமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பினால் அதற்குள் அவர்கள் ஆதாரங்களை அழித்துவிடக்கூடும் என்பதால் நோட்டீஸ் கொடுக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியிடம் இருந்து ஒன்பது முறை கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது. சிறுமியின் வயதை 27 என மாற்றி ஆதார் அட்டையை போலியாக தயாரித்துள்ளனர். இது விதிமீறல் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, '35 ஆண்டுகளாக செயல்படும் மருத்துவமனை மீது முந்தைய காலத்தில் எந்தப் புகாரும் இல்லை எனவும், மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி, விதிமீறல் இருப்பதாக அதிருப்தி அடைந்தால் மட்டுமே மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்ய முடியும்' எனத்தெரிவித்தார்.

மேலும், 'மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்வதற்கான காரணங்களை தெரிவிக்கப்படவில்லை' எனக் கூறி, தமிழ்நாடு அரசின் உத்தரவுகளை ரத்து செய்த நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர்கள், மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி 12 வாரங்களுக்குள் இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் உள்ளிட்ட கருவிகளுக்கு வைக்கப்பட்ட சீல்களை அகற்றவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை மனு தள்ளுபடி

For All Latest Updates

TAGGED:

Court orders

ABOUT THE AUTHOR

...view details