சென்னை: 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ரிப்பன் மாளிகையானது பெருநகர சென்னை மாநகராட்சியின் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. ரிப்பன் மாளிகை அவ்வப்போது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுவது வழக்கம். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்நிலையில் தற்போது நிரந்தரமாக நிறம் மாறும் வண்ண விளக்குகளால் ரிப்பன் மாளிகை ஒளிரூட்டப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின்கீழ், சென்னை மாநகராட்சியில் சீர்படுத்தும் வகையில் சுவர் ஓவியங்கள் வரைவது, மாநகராட்சி குப்பை இல்லாத மாநகராட்சி ஆக மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஓராண்டாக சென்னை மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்ட சாதனைகள் குறித்த சாதனை விளக்கப் புத்தகத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் துரைமுருகன், கே.என். நேரு மற்றும் சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர், மேயர், துணை மேயர் மற்றும் சென்னை மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘இந்த ரிப்பன் கட்டடம் காலையில் வெள்ளை மாளிகையாக, மாலையில் வண்ண விளக்குகளால் ஒளிரும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கட்டடம் என்பது வரலாற்று கட்டடம். நான் மாணவனாக இருக்கும்போது சென்னையின் சில இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது, இதனை நானும் வேடிக்கை பார்த்தவன். இன்று இந்த கட்டடத்தின் விளக்கு எரிய முன்னிற்கிறேன்.