சென்னை: கோவை மாவட்டம், வால்பாறையில் வசிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் தன் மகனுக்கு, அங்குள்ள பியூலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவீத ஒதுக்கீட்டில் இடமளிக்கக் கோரி கடந்த 2022 மே மாதம் விண்ணப்பித்துள்ளார்.
அந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த பள்ளி நிர்வாகம், லட்சுமணனின் வீடு பள்ளியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு அப்பால் இருப்பதாகக் கூறி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது. இதையடுத்து கல்விக் கட்டணத்தைச் செலுத்தி தன் மகனை எல்.கே.ஜி வகுப்பில் சேர்த்துள்ளார்.
இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை மறுக்கப்பட்டதை எதிர்த்து லட்சுமணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பள்ளியின் இருப்பிடம், தூரம் குறித்த விதிகள் கட்டாயமில்லை என்றும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இடங்கள் காலியாக இருந்தால், நிர்ணயிக்கப்பட்ட தூரத்திற்கு அப்பால் உள்ளவர்களையும் சேர்க்கலாம் என தெளிவுபடுத்தி உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவினை குறிப்பிட்டு சுட்டிக்காட்டினார்.
பின்னர், இந்த பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட 16 இடங்களில் 2022-23 மற்றும் 2023-24ஆம் கல்வியாண்டுகளில் 3 மற்றும் 8 இடங்கள் காலியாக உள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, காலியிடம் இருக்கும்போது தூர விதிகளைக் குறிப்பிட்டு, சில இடங்களை காலியாக வைத்திருப்பது என்பது, 6 முதல் 16 வயதானவர்களுக்கு இலவச கல்வியை வழங்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் நோக்கத்திற்கு எதிராக அமைந்துள்ளது என நீதிபதி குறிப்பிட்டார்.
மேலும், அந்த பகுதியில் பியூலா மெட்ரிக் பள்ளியைத் தவிர வேறு பள்ளி ஏதும் இல்லாததால், மனுதாரரின் மகனுக்கு 3 வாரத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுமட்டும் அல்லாது, எல்.கே.ஜி மாணவர் சேர்க்கைக்காக வசூலித்த கட்டணத்தை 2 வாரங்களில் மனுதாரரிடம் பள்ளி நிர்வாகம் திருப்பி செலுத்த வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:மாமூல் தர மறுத்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு நேர்ந்த கொடூரம்... சென்னையில் பகீர் சம்பவம்!