சென்னை: கிண்டியில் உள்ள சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி இன்று (நவ.2) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, "சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தொன்மை வாய்ந்த சிலைகள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்வதாகத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஐஜி தினகரன் தலைமையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் பொன்னி உள்ளிட்ட அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
சிலை திருட்டு தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி பேட்டி சோதனையில் தொன்மை வாய்ந்த சிவன் சிலை ஒன்றும், 15 ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றபட்ட ஆவணங்களை ஆய்வு செய்தபோது, தஞ்சாவூரில் உள்ள கடை ஒன்றில் மேலும் சிலைகள் பதுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. தஞ்சாவூர் சென்ற தனிப்படைக் குழு இரண்டு சிலைகளைப் பறிமுதல் செய்தது.
50 கோடி ரூபாய் மதிப்புள்ள சிவன் சிலை
சிலைக் கடத்தல் தொடர்பாக ஆனந்த் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பல சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுவரை சோதனையில், ஐந்து சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரண்டு சிலைகள் கம்போடியா நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டது. இதன் மதிப்பீடு தலா 30 கோடி ரூபாய் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. சிவன் சிலை 50 கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விசாரணை செய்ததில் இவர்களுக்கு டெல்லியில் தலைமையிடமாக ஒரு கடையும், தஞ்சாவூரில் ஒரு கடையும், சென்னையில் ஒரு கடையும் உள்ளன எனத் தெரிய வந்தது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மன உளைச்சலால் ஐஏஎஸ் அலுவலரின் மனைவி தற்கொலை!