சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் வளாகத்தில் நடந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் இருந்து சென்று திரும்ப ஏற்பாடுகளை செய்த அமைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்களைப் பாராட்டினார்.
பின்பு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "காசி தமிழ் சங்கம் வெற்றி பெற காரணமாக இருந்த எல்லோருக்கும் நன்றிகள். குறுகிய காலத்துக்குள் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்ததற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் எண்ணத்தில் தோன்றியது தான் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்வு. மிகக் குறுகிய காலத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொருவரின் உழைப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. காசி தமிழ் சங்கமம் தொடக்கம் தான். அங்கு சென்று வந்தவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் அனுபவங்களைக் கூற வேண்டும். இதனை மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும்.
திட்டங்களை அதிகாரிகள், அலுவலர்கள் மட்டும் சிறப்பாக செய்துவிட முடியாது. அது மக்கள் இயக்கமாக மாறினால் தான், அது சிறப்பாக மக்களை சென்றடையும் என்று பிரதமர் மோடி கூறுவார். தூய்மை இந்தியா திட்டம், கழிப்பறை கட்டும் திட்டம், கரோனா எதிர்ப்பு இப்படி எல்லாமே மக்கள் இயக்கமாக மாறியதே வெற்றிக்கு காரணம்.
தமிழ்நாட்டில் வித்தியாசமான ஒரு அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றிற்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள், இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால் தமிழ்நாடு அதை வேண்டாம் என்று சொல்கிறது. தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். பொய் பரப்புரையை நாம் முறியடிக்க வேண்டும். எது உண்மை என்று மக்களுக்கு சொல்ல வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கம் வேறு, அவரது நோக்கம் நாட்டில் உள்ள அனைவரும் ஓர் குடும்பம், அனைவரும் குடும்பம் உறுப்பினர்கள் என்பதாகும். ஆங்கிலேயர் காலத்தில் தான் இந்தியாவில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. ஆகவே, பாரதத்தின் பகுதியே தமிழகம். தமிழகம் பாரதத்தின் அடையாளம். காசி தமிழ் சங்கமம் என்பது தொடக்கம் தான். இதன் பயணம் தொடரும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாம் தான் தலைமையாக இருக்கப் போகிறோம். இந்தியா தான் அனைத்து நாடுகளுக்கும் தலைமையாக இருக்க போகிறது" என்று பேசி இருந்தார்.