சென்னை: ஆந்திராவைச் சேர்ந்தவர் பூபால அசோக். சென்னையில் உள்ள தோழியை சந்திப்பதற்காக கடந்த 30ஆம் தேதி சென்னைக்கு வந்துள்ளார். பின்னர் அன்று மாலை பூபால அசோக், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் தோழியை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது டிக்கெட் கவுன்ட்டர் அருகே இருந்த கழிவறைக்கு அவர் சென்றபோது பின் தொடர்ந்த மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று பூபால அசோக்கை மிரட்டி செல்போனை கேட்டுள்ளனர்.
செல்போனை தரமறுத்ததால் பூபால அசோக்கின் கை,காலில் வெட்டிவிட்டு செல்போனை பறித்துவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டனர். ரத்தகாயத்துடன் இருந்த பூபால அசோக்கை மீட்ட ரயில்வே காவல் துறையினர் கிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பறித்துச்சென்ற செல்போன் அவரது தோழியுடையது எனத் தெரியவந்தது. இதனையடுத்து ரயில்வே காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினர். சிசிடிவியில் பதிவான அடையாளங்களை வைத்து பழைய குற்றவாளிகளான திருவான்மியூரைச் சேர்ந்த பாலா, மகேஷ் மற்றும் அசோக் நகரை சேர்ந்த நிர்மல் ஆகியோர் வெட்டிவிட்டு செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.