தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹஜ் புனித யாத்திரை: முதல் குழு இன்று ஜெட்டா பயணம் - மெக்கா

ஹஜ் புனித யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களின் முதல் குழு இன்று காலை சென்னையிலிருந்து, 2 தனி சிறப்பு விமானங்களில் ஜெட்டா புறப்பட்டு செல்கின்றனர்.

Hajj pilgrimage
ஹஜ் புனித யாத்திரை

By

Published : Jun 7, 2023, 6:54 AM IST

சென்னை: ஹஜ் புனித யாத்திரை பயணம் இன்று தொடங்குவதை முன்னிட்டு, நேற்றில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் வரும் 29ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக இஸ்லாமியர்கள் ஒவ்வொரு ஆண்டும் அந்த நேரத்தில், புனித ஹஜ் யாத்திரையாக, சவுதி அரேபியாவில் இருக்கும் மதினா மெக்காவிற்கு செல்வார்கள்.

இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. அதோடு அவர்கள் குறைந்த விமான கட்டணத்தில், பயணிக்க தனி சிறப்பு விமானங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அதேபோல் சென்னையில் இருந்து ஜெட்டா செல்லும் சிறப்பு விமானங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பயணிப்பார்கள்.

ஆனால், கடந்த ஆண்டு மத்திய அரசு சென்னையில் இருந்து ஹஜ் யாத்திரிகர்களுக்காக சிறப்பு விமானங்களை இயக்கவில்லை. இதனையடுத்து தமிழ்நாடு ஹஜ் யாத்திரிகர்கள், கேரள மாநிலம் கொச்சி சென்று, அங்கிருந்து ஹஜ் யாத்திரை பயணத்தை மேற்கொண்டனர். இந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் சென்னையில் இருந்து சிறப்பு தனி விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு தனி விமானங்கள் இன்று (ஜூன் 7) முதல் வருகிற 21ஆம் தேதி வரையில் தொடர்ந்து 2 வாரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹஜ் யாத்திரிகர்கள், சென்னையில் இருந்து ஜெட்டா வழியாக புனித தலமான மக்கா மதினா செல்கின்றனர். இன்று காலை முதல் ஏர் இந்தியா சிறப்பு தனி விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, காலை சுமார் 11.20 மணிக்கு ஜெட்டா புறப்படுகிறது.

அந்த விமானத்தில் சுமார் 256 ஹஜ் யாத்திரிகர்கள் செல்கின்றனர். இதனையடுத்து இரண்டாவது விமானம் இன்று நண்பகல் 12.10 மணியளவில் சென்னையில் இருந்து ஜெட்டா புறப்படுகிறது. அதில் சுமார் 162 யாத்திரிகர்கள் செல்கின்றனர். இந்த ஹஜ் யாத்திரிகர்கள் அனைவரும் இன்று காலை 6.30 மணிக்கு சென்னை பாரிமுனையில் உள்ள ஹஜ் கமிட்டி அலுவலகத்தில் இருந்து, தனி பேருந்துகளில் சென்னை விமான நிலையம் அழைத்து வரப்படுகின்றனர்.

மேலும், இவர்களை சென்னை சர்வதேச விமான நிலையத்தில், காலை 7 மணிக்கு தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைக்கிறார். இவர்கள் ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு வரும் ஜூலை முதல் வாரத்தில், இதேபோல் தனி சிறப்பு விமானங்களில் சென்னை திரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஹஜ் யாத்திரை பயணம் இன்றில் இருந்து தொடங்குவதை முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: சென்னை மக்களை குளிர்வித்த கோடை மழை... பொதுமக்கள் மகிழ்ச்சி!!

ABOUT THE AUTHOR

...view details