தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திராவிட மாடல் ஒரு காலாவதியான கொள்கை; CM மீது தனிப்பட்ட மரியாதை உண்டு - ஆளுநர் ஆர்.என்.ரவி

திராவிட மாடல் ஒரு காலாவதியான கொள்கை என்றும், நாடு முழுவதும் மொழிசார் நிறவெறியை அமல்படுத்தும் கருத்தியல் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். இதற்குப் பதிலடியாக, திராவிட மாடல் குறித்து பேசுவதற்கு ஆளுநருக்கு அருகதை இல்லை என அரசியல் ஆய்வாளர் ஜோதி நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

Governor Ravi
ஆளுநர் ரவி

By

Published : May 4, 2023, 4:25 PM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ”திராவிட மாடல் என்பது ஒரு காலாவதியான கொள்கை. அத்தகைய மாதிரி ஆட்சிமுறை எதுவும் இல்லை. இது ஒரு அரசியல் முழக்கம் மட்டுமே. காலாவதியான சித்தாந்தத்தை நிலை நிறுத்துவதற்கான அவநம்பிக்கையான முயற்சி. 'ஒரு பாரதம், ஒரே இந்தியா' என்ற கருத்தை சுவைக்காத ஒரு சித்தாந்தம்.

தேசிய சுதந்திர இயக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு சித்தாந்தம். தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள், தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர். ஆனால், இந்த அரசு ஆங்கிலேயர்களுடன் ஒத்துழைத்தவர்களை மகிமைப்படுத்துகிறது. நாடு முழுவதும் மொழிசார் நிறவெறியை வெறித்தனமாக அமல்படுத்தும் ஒரு கருத்தியல் தான் இது. வேறு எந்த இந்திய மொழியும் தமிழ்நாட்டிற்குள் நுழைய அனுமதி இல்லை. நான் இதனை ஒரு போதும் ஆதரிக்க மாட்டேன்” என கூறினார்.

வெளியேறியது ஏன்?:கடந்த ஜனவரியில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது ஆளுநர் உரைக்குப் பின், அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததை நினைவுகூர்ந்த ஆளுநர், ’’நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை அளிக்கப்படுகிறது. ஆனால், தமிழக சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நான் உரையாற்றுவதற்கு முன், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன். மேலும், ஆளுநர் வருகை மற்றும் புறப்பாடு ஆகிய இரு சமயங்களிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். நான் வற்புறுத்திய போதிலும், அவர்கள் ஆரம்பத்தில் தேசிய கீதத்தை இசைக்கவில்லை.

மேலும் ஆளுநர் உரையின்போது திராவிட மாடல் ஆட்சியைப் புகழ்ந்து பேச வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், நான் அதை பேசவில்லை. தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தனர். இதையடுத்து நான் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, கள்ளக்குறிச்சி சம்பவம் போன்றவற்றை குறிப்பிட்டுப் பேசினேன். எனது உரைக்குப் பிறகு, பேச்சாளர் தமிழ்ப் பதிப்பைப் படிக்க, நான் காத்திருந்தேன். ஆனால், நெறிமுறைகளுக்கு எதிராக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுந்து, சபாநாயகருடன் இணக்கமாக, ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, என்னை சபையில் சங்கடப்படுத்த நினைத்தார். அதைச் செய்ய நான் அவர்களை அனுமதிக்கவில்லை. எனவே, தான் நான் வெளியேறினேன்" என விளக்கம் அளித்துள்ளார்.

நிலுவை மசோதாக்கள் எத்தனை?: நிலுவையில் உள்ள மசோதா தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்துள்ள ஆளுநர், "ஆளுநர் மாளிகையிலோ அல்லது ஆளுநரிடமோ எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை. நான் 2021-ல் (செப்டம்பர்) இங்கு வந்தபோது, ​​19 மசோதாக்களைப் பெற்றேன். அதில் 18 மசோதாக்களை அனுப்பிவிட்டேன். நீட் தேர்வில் ஒன்று, அது பொதுப்பட்டியலில் இருப்பதால் குடியரசுத் தலைவருக்கு ஒதுக்கினேன்.

2022ல் நான் 59 மசோதாக்களைப் பெற்றேன். 3 குடியரசுத் தலைவருக்கு ஒதுக்கப்பட்டது. ஒன்றை மாநில அரசே வாபஸ் பெற்றது. 8 மசோதாவுக்கான ஒப்புதல் நிறுத்தப்பட்டது. அதாவது 2022-க்கான மசோதா எதுவும் நிலுவையில் இல்லை" என்றார்.

சித்தா பல்கலை. மசோதா நிலை என்ன?: சித்தா பல்கலைக்கழக மசோதாவின் நிலை குறித்த கேள்விக்கு, ”சித்தா பல்கலைக்கழக மசோதா தாக்கல் செய்யப்படும்போது, ​​அது பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) சட்டம் மற்றும் விதிகளுக்கு இசைவாக இருக்க வேண்டும் என்ற நிலையில், நான் அதற்கு ஒப்புதல் அளிக்க ஒப்புக்கொண்டேன். அங்கு மீண்டும் இந்த பல்கலைக்கழகத்துக்கான வேந்தர், முதலமைச்சர் என்பது மாநில பட்டியலில் வருகிறது. இது சாத்தியமில்லை என்றேன். அதனால், மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என பதில் அளித்துள்ளார்.

'ஸ்டாலின் அன்பானவர்':முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான தனிப்பட்ட உறவு குறித்த கேள்விக்கு, "உண்மையில், அவர் (ஸ்டாலின்) மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. நல்ல மனிதர் அவர். நான் அவரிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டேன். அவரும் என்னிடம் அன்பாக நடந்து கொண்டார். தனிப்பட்ட முறையில் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

'அருகதை இல்லை': இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நேர்காணல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் ஆய்வாளர் ஜோதி நரசிம்மன், "திராவிட மாடல் ஒரு காலாவதியான கொள்கை என ஆளுநர் கூற அவருக்கு எந்த ஒரு அருகதையும் இல்லை. பெரும்பாலான சட்ட மசோதாக்களுக்கு, குறிப்பாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்ததால் பல உயிர்கள் பறிபோயின. ஆளுநருக்கு நாட்டின் இறையாண்மை குறித்து தெரியவில்லை. நாளிதழ்களில் நேர்காணல் மூலம் ஆளும் கட்சியைப் பழி சுமத்துவது ஆளுநருக்கு இழிவாகும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காலை சிற்றுண்டித் திட்டம் விரிவாக்கம்? முதலமைச்சர் ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details