சென்னை:கல்லூரி மாணவியும், கால்பந்தாட்ட வீராங்கனையுமான பிரியாவுக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனை எலும்பு முறிவு துறை மருத்துவர்கள், வலது கால் முட்டியில் மேற்கொண்ட தவறான அறுவை சிகிச்சையில், ரத்த நாளம் பாதிக்கப்பட்ட நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு மருத்துவர்களான சிங்கார வடிவேலன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் நடத்திய ஆய்வில், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக்குறைவினால் தான் மாணவி உயிரிழந்தார் என மருத்துவ கல்வி இயக்குநருக்கு அறிக்கை தாக்கல் செய்ததின் படி, பெரியார் நகர் புறநகர் மருத்துவமனை எலும்பு முறிவு துறை மருத்துவர்கள், பால்ராம் சங்கர் மற்றும் சோமசுந்தர் ஆகியோரை மருத்துவ கல்வி இயக்குநரகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இயற்கைக்கு மாறான மரணம் என்கிற சட்டப்பிரிவு மாற்றி அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற அடிப்படையில் பெரவள்ளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இரண்டு மருத்துவர்களை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர்.