சென்னை: 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதுவதற்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 27ஆம் தேதி முதல் 2024 ஜனவரி 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10, 11மற்றும்12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு 2024 மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது.
பொதுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கனவே, நேரடித் தனித்தேர்வராக 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத, வருகை புரியாத தேர்வர்கள் அனைவரும், தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதுவதற்கும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.
10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் டிசம்பர் 27ஆம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு (Service centre) நேரில் சென்று கட்டணத்தை செலுத்தி இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.
தத்கல்(சிறப்பு அனுமதி) முறையில் 2024 ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தேர்வுக்கட்டணத்துடன் 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு கூடுதலாக ரூ.1000, 10ஆம் வகுப்பிற்கு கூடுதலாக ரூ.500 சிறப்புக் கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் தத்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.