சென்னை: புரசைவாக்கம் நாகப்பன் தெருவில் உள்ள தி புரசைவாக்கம் தனவர்தன சாசுவத நிதி லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. வங்கிகளில் அளிக்கப்படும் வட்டியை விட இந்த நிறுவனத்தில் 3 மடங்கு வட்டி அதிகமாக அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை நம்பி ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை இந்நிறுவனத்தில் செலுத்தி அதற்கான வட்டியும் பெற்று வந்தனர்.
கடந்த 8 மாதங்களாக பொதுமக்களிடம் பெற்ற பணத்திற்கு நிதி நிறுவனத்தார் முறையாக வட்டி கொடுக்காமலும், செலுத்திய பணத்தையும் திரும்பத்தராமலும் பல்வேறு காரணங்களைக் கூறி காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நிதி நிறுவனத்தார் செலுத்திய பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றுவதாக 75க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவில் தொடர்ச்சியாக புகார்கள் அளித்தனர்.
அதனடிப்படையில் மோசடி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தி புரசைவாக்கம் தனவர்தன சாசுவத நிதி லிமிடெட் நிறுவனம் மற்றும் காந்தி அவென்யூவில் அமைந்துள்ள நிறுவனத்தின் உரிமையாளர் ஈஸ்வரப்பன் இல்லத்திலும் டி.எஸ்.பி மகேந்திரன் தலைமையிலான பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.