தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு..! - court directed the school education department

ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வகையில் புதிய அறிவிப்பாணையை வெளியிட பள்ளிக்கல்வித்துறை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி
தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி

By

Published : Oct 26, 2022, 9:48 PM IST

சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள், உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்விற்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டார்.

அதன்படி பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்விற்கான பட்டியலைத் தயாரிக்கும்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

கடந்த ஜூலை 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு முன், தலைமை ஆசிரியர்கள் சிறப்பு இடமாற்ற கலந்தாய்வை நடத்தக் கோரிய வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பதவி உயர்விற்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது.

இதை எதிர்த்து வனஜா, பிரபு உள்ளிட்ட 41 இடைநிலை ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டுமென உத்தரவிடக் கோரி சக்திவேல் என்ற ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகளை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் விசாரித்தார். அப்போது, பதவி உயர்வு கலந்தாய்வைத் தள்ளிவைத்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஆசிரியர்கள் தரப்பில், கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்த 2010ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட தங்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு பொருந்தாது என்பதால் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டுமென வாதிடப்பட்டது.

ஆசிரியர் சக்திவேல் தரப்பில், தகுதியில்லாத ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கும் வகையில் பட்டியல் தயாரிக்கப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று வாதிடப்பட்டது. மேலும், மத்திய மாநில அரசுகள் தரப்பில், கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்தாலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், ஒரு கல்வி நிறுவனம் சிறந்த கல்வியை வழங்க அதன் ஆசிரியர்களின் தகுதியே காரணம் எனவும், சிறந்த கல்வித்தகுதியைப் பெறாத ஆசிரியர்களால் தரமான கல்வியை வழங்க முடியாது எனத் தெரிவித்தார்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 9 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டதிலிருந்து, அவர்களும் அந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைப் பட்டதாரி ஆசிரியர்களாகவும், தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்குவது குறித்த புதிய அறிவிப்பாணையை வெளியிட பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டு, கலந்தாய்வைத் தள்ளிவைத்ததை எதிர்த்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:சத்தியமங்கலம்: கோயில் திருவிழாவை முறைப்படுத்த நடவடிக்கை - தமிழ்நாடு அரசு விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details