தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வருமானத்துக்கு அதிகமாக பணம் சேர்த்த முன்னாள் அமைச்சரின் உதவியாளர்.. விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்த நீதிமன்றம்! - உயர் நீதிமன்றம் சென்னை

வருமானத்துக்கு அதிகமாக 73 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்த வழக்கில், முன்னாள் அமைச்சரின் நேர்முக உதவியாளரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 8:30 PM IST

சென்னை:1991-96ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்த இந்திரகுமாரியின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர் வெங்கடகிருஷ்ணன். இவர், வருமானத்துக்கு அதிகமாக 73 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வெங்கடகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மஞ்சுளாவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் விடுதலை செய்து, 2012ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

சாதாரண பின்னணியைக் கொண்ட வெங்கடகிருஷ்ணன் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் வெளிநாட்டு கரன்சிகள், சொத்து ஆவணங்கள், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதையும், அவரது மனைவி மஞ்சுளாவுக்கு என தனிப்பட்ட எந்த வருவாய் ஆதாரம் இல்லாததையும் கருத்தில் கொள்ளாமல் இருவரையும் விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

சொத்துக்களுக்கு உரிய விளக்கங்களை அளித்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆராய்ந்து சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என வெங்கடகிருஷ்ணன், மஞ்சுளா தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், ஆவணங்களை ஆராய்ந்ததில், வெங்கடகிருஷ்ணனும், மஞ்சுளாவும் வருமானத்துக்கு அதிகமாக 700 விழுக்காடு சொத்துக்கள் சேர்த்துள்ளது நிரூபணமாகியுள்ளதாக கூறி, இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், தண்டனை விவரம் குறித்து விளக்கமளிப்பதற்காக நாளை (செப்.19ஆம்) வெங்கடகிருஷ்ணன் மற்றும் மஞ்சுளாவை ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:6 முதல் 9 வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு திறனறிவுத் தேர்வு! பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு என்ன?

ABOUT THE AUTHOR

...view details