சென்னை: கீழ்ப்பாக்கத்தில் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தியுடன் வந்ததாக சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரைக் கடந்த 18ஆம் தேதி நள்ளிரவு உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு விக்னேஷ் இறந்ததாகத் தெரிகிறது. விக்னேஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி, அவரது சகோதரர் குற்றம்சாட்டி வந்தார்.
இதனையடுத்து எழும்பூர் குற்றவியல் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் விக்னேஷின் உடல் உடற்கூராய்வு நடத்தப்பட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவால் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து விக்னேஷின் உடல் அண்ணன் வினோத்திடம் ஒப்படைக்கப்பட்டு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும், விக்னேஷ் மரணம் தொடர்பாக பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த சந்தேக மரணம் தொடர்பாக துறை ரிதீயான விசாரணை நடத்தப்பட்டு, விக்னேஷை விசாரித்த காவல் கட்டுப்பாட்டு அறையைச்சேர்ந்த உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், தலைமைச்செயலக காலனி காவல் நிலையக் காவலர் பொன்ராஜ் மற்றும் ஊர் காவல்படையைச் சேர்ந்த தீபக் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் இவ்வழக்கின் மேல் விசாரணைக்காக சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ‘திமுகவின் அடக்குமுறைக்கு பாஜக பணிந்து போகாது’ - பாஜக மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன்