சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகளே இருக்கும் நிலையில் தலைவர்கள் பேசும் கருத்துகள் அரசியல் தளத்தில் கவனம் பெறுகின்றன. தேசிய அளவில் பாஜகவின் தேர்தல் முகமாக கருதப்படுபவர் உள்துறை அமைச்சர், அமித்ஷா. இந்தியா முழுவதும் தேர்தல் அரசியலில் பாஜக சார்பாக இவர் எடுக்கும் முடிவு இறுதியானது. சமீபத்தில் கர்நாடகத்தேர்தல் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அமித்ஷா பேட்டியளித்தார்.
அதில், அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமித்ஷா, "அதிமுக விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை. ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் சேர்ந்து சுமூக முடிவை எடுக்க வேண்டும். சுமூக முடிவை இருவரும் பேசி எடுக்க வேண்டுமா, வேண்டாமா என்பது என்னை சார்ந்தது இல்லை" எனக் கூறியிருந்தார்.
அமித்ஷாவின் இந்த கருத்து அதிமுக - பாஜக வட்டாரங்களில் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த காலங்களில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் பிரிந்திருந்தபோது இருவரையும் கையைப் பிடித்து இணைத்து வைத்த வரலாறு பாஜகவிற்கு உண்டு. இந்தநிலையில், அமித்ஷாவின் இந்த பட்டும்பாடாமலும் கூறிய கருத்திற்கு பின்னால் பல கேள்விகள் எழுந்துள்ளன. சமீப காலமாக அதிமுக - பாஜகவில் உள்ள இரண்டு கட்டத் தலைவர்கள் கடுமையாக கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்தனர்.
குறிப்பாக, அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அண்ணாமலை அரசியலில் முதிர்ச்சி இல்லாதவர். அவரைப் பற்றி பேசுவது அவசியமில்லை" என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பில் அண்ணாமலையும் கலந்துகொண்டார். கூட்டணி குறித்து பல்வேறு விவகாரங்கள் குறித்தும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்தும் பேசப்பட்டதாகத் தகவல் வெளியாகியது.
அதில், அண்ணாமலை கலந்துகொள்வார் என எதிர்பார்க்காத எடப்பாடி பழனிசாமி, அவர் மீது பல்வேறு புகார்களை அமித்ஷாவிடம், ஈபிஎஸ் கூற இருந்தார் என சொல்லப்பட்டது. சந்திப்பு முடிந்ததும் வெளியில் வந்து பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, "அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது. அண்ணாமலைக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை" எனக் கூறியிருந்தார். இதனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் ஒரு வழியாக அதிமுக - பாஜக இடையேயான மோதல்களை அமித்ஷா முடித்து வைத்துவிட்டார் எனப் பேசப்பட்டது.
உடைந்த கண்ணாடியை ஒட்டவைத்தது எனக் கூறப்பட்ட நிலையில் பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர். சேகர், "அதிமுக ஆறாக உள்ளது. எங்களுக்கு 25 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். அதிமுக கொடுக்கின்ற இடத்தில் இல்லை" என கூறிய கருத்து மீண்டும் புயலை கிளப்பியது. இதற்கு பதிலளித்த அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், "இதுபோன்று கூட்டணியில் விரிசல் ஏற்படும் வகையில் பேசும் நபர்களை அண்ணாமலை கண்டிக்க வேண்டும். இல்லை என்றால் இது அண்ணாமலையின் கருத்தாக எடுத்துக்கொள்ளப்படும்" என கூறினார்.
அண்ணாமலையையும், ஈபிஎஸ்யையும் இணைத்து சந்தித்த அமித்ஷா, "தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே இணைத்துவிட்டால் கசப்புகள் நீங்கிவிடும். களத்தில் பாதிப்பு இருக்காது" என கருதியதாக கூறப்படுகிறது. ஆனால், அதிமுக - பாஜக இடையே மோதல் போக்குத் தொடர்வதால் களத்தில் இந்தக் கூட்டணி தாக்குபிடிக்குமா என்ற கேள்வி எழுகின்றது. அண்ணாமலையின் தொடர் நடவடிக்கைகள், திமுக இடத்தில்தான் அதிமுகவையும் வைத்துள்ளார் எனத் தெரியவருகிறது.