தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை தேர் விபத்து: பேரவைக்குள் அதிமுகவினர் தர்ணா.. கடும் அமளி! - தஞ்சை தேர் விபத்து

தஞ்சாவூர் அப்பர் கோயில் தேர் விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து வெளிநடப்பு செய்த போது பேரவைக்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் சுமார் அரை மணிநேரம் கடும் அமளி ஏற்பட்டது.

தஞ்சை தேர் விபத்து
தஞ்சை தேர் விபத்து

By

Published : Apr 27, 2022, 5:03 PM IST

சென்னை:தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் கோயில் தேர்விழாவில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக இன்று (ஏப்.27) தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது.

இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திருவிழா காலங்களில் அரசு உரிய பாதுகாப்பு அளிக்காததை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, கும்பகோணம் மகாமகத்தின் போது ஏற்பட்ட விபத்து குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேசிய விவரங்களை காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியவற்றை அவை குறிப்பிலிருந்து நீக்க கோரி தொடர்ச்சியாக கூச்சலிட்டு அதிமுகவினர் கோஷம் எழுப்பினர்.

அதிமுக தர்ணா

பின்னர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவையில் பேச முற்பட்ட போது, வெளிநடப்பு செய்துவிட்டு பேச அனுமதி கேட்டால் கொடுக்க முடியாது என பேரவை தலைவர் அப்பாவு அனுமதி மறுத்தார். அதனைத் தொடர்ந்து, பேரவை உள்ளேயே அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவையில் தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்ற அப்பாவு உத்தரவிட்டார். தொடர்ந்து பேரவை வளாகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதிக்க வேண்டும் எனக் கூறி கண்டன கோஷம் எழுப்பினர். பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அப்பாவு விளக்கம்

இதற்குப் பின் பேசிய பேரவை தலைவர் அப்பாவு, "பேரவையில் விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடந்துள்ளன. மகாமகத்தின் போது ஏற்பட்ட விபத்து குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேசிய விவரங்களை காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளதைப் பேசினாரே தவிர புதிதாக ஒன்றும் பேசவில்லை.

இதனை அதிமுகவினர் ஏன் எதிர்க்கிறார்கள் எனத் தெரியவில்லை. அப்படி நீக்கவேண்டும் என்று கூறினால் அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசியதை நீக்க வேண்டும் என்று அதிமுகவினர் சொல்கிறார்களா?.

சட்டப்பேரவை விதி 55 கீழ் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் ஒரு முறை மட்டுமே பேச அனுமதி அளிக்க முடியும். கோவிந்தசாமி உள்ளிட்ட ஒரு சில அதிமுக உறுப்பினர்கள் அமைச்சர்களை ஒருமையில் பேசியது வருந்தக்கத்தது. அதனால் இன்று ஒரு நாள் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டேன்" என்றார்.

இதிலும் அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள்

தொடர்ந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், "தஞ்சையில் விபத்தில் சிக்கி உயிர்கள் துடித்து கொண்டிருக்கும் நிலையில் சாவு வீட்டில் பாகற்காயை பார்த்தது போல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். எதிர்பாராத ஒரு விபத்து தஞ்சையில் ஏற்பட்டது போல் சட்டமன்றத்தில் எதிர்பாராத நிகழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருக்கையில், அரசியல் செய்து எதிர்க்கட்சி நண்பர்கள் இப்படி நடந்து கொண்டது வருத்தத்திற்குரியது. அவர்கள் செய்த ஆர்ப்பாட்டம் விரும்பத்தக்கது அல்ல. சபாநாயகர் அதனைக் கையாண்ட விதத்தை பாராட்டுகிறேன். சட்டமன்ற விதிகளில் 55 , 56இன் கீழ் சிறப்பு தீர்மானம் கொண்டு வரும் போதெல்லாம் அதிமுகவினர் பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர்" என்றார்.

அரசுக்கு தெரிவிக்காமல் தேர் திருவிழா

தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்காமல் தஞ்சையில் தேர் திருவிழா நடத்தி இருக்கிறார்கள் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இது குறித்துப் பேசிய அவர், வரும் காலத்தில் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க திருவிழாக்கள் எங்கெல்லாம் நடக்கிறதோ, அங்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து போதிய ஏற்பாடுகளும், பாதுகாப்பும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஒரு நபர் விசாரணை குழு அமைப்பு

சப்பரம் மேல்பகுதி மடங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. வளைவில் திரும்பும் போது மடங்கவில்லை. சப்பரத்தின் உச்சிப்பகுதி மடக்கப்பட்டிருந்தால் விபத்து தடுக்கப்பட்டிருக்கும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

முதலமைச்சர் ஆறுதல் சொல்வதற்காக தஞ்சாவூருக்கு நேரில் சென்று உள்ளார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து இது போன்ற தீய நிகழ்வுகள் இனி வரக்கூடிய காலங்களில் நடைபெறாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க, வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருவிழாக்களில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றாததை கண்டித்து அதிமுக வெளிநடப்பு - எடப்பாடி பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details