தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிகள் திறப்பதில் அக்கறையுடன் முடிவுகள் எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு - பள்ளிகள் திறப்பு

சென்னை: பள்ளிகளைத் திறக்கும் விவகாரத்தில் இப்போதுள்ள ‘கரோனா சூழலைக்’ கருத்தில் கொண்டு கூடுதல் அக்கறையுடன் முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என திமுக சட்டப்பேரவை உறுப்பின்னரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

thangam thennarasu
thangam thennarasu

By

Published : May 28, 2020, 8:02 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகப் பள்ளிகளில் ‘ஆன்லைன்’ மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதற்குத் தடை விதிக்கப்படுகின்றது என்றும் அதை மீறும் வகையில் செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை பாயும் எனவும் வீராவேசமாக அறிவித்த அடுத்த அரைமணி நேரத்திற்குள்ளாகவே, “ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதைத் தடுக்க முடியாது அவற்றுக்குத் தடை ஏதுமில்லை” என "வழக்கம் போல்” பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மறு அறிவிப்பொன்றினைச் செய்திருக்கின்றார்.

தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை ஆராயாமலும், ஆலோசிக்காமலும்; எடுக்கப்படும் இத்தகைய திடீர் முடிவுகள் அந்தத் துறையை மட்டுமல்ல; ஒட்டு மொத்தத் தமிழகத்தையே தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றன என்பது கண்கூடான உண்மை.\

கரோனா நோய்த் தொற்றின் தீவிரம் சிறிதும் குறையாமல் தமிழகம் இன்றும் தத்தளித்துக் கொண்டுள்ள நிலையில், சிலருடைய அழுத்தத்திற்குப் பணிந்து உடனடியாக பள்ளிகளைத் திறந்து விட வேண்டும் என்றும், அவர்தம் விருப்பத்திற்கொப்ப ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனவும் முனைப்புடன் எதைப்பற்றியும் கவலைப்படாது பள்ளிக் கல்வித்துறை செயல்படுவது வேதனைக்குரியது மட்டுமல்ல; கடும் பின் விளைவுகளை உருவாக்கக் கூடியதுமாகும்.

அதேபோல் பள்ளிகளைத் திறக்கும் விவகாரத்திலும் இப்போதுள்ள ‘கரோனா சூழலைக்’ கருத்தில் கொண்டு கூடுதல் அக்கறையுடன் முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ‘கரோனா தாக்கம்´ முற்றிலும் தணிந்த பின்னர், உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு தனித்தனியாக முதல் கட்டத்திலும், அதன் பின் வரும் மாதங்களில் தொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களுக்கான பள்ளிகளைத் திறக்கவும் அரசு ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும். மழலையர்களுக்கான வகுப்புகளை கரோனா தொற்று நோய் முற்றிலும் நீங்கிய பிறகே திறப்பது குறித்து அரசு யோசிக்க வேண்டும்.

இது ஒருபுறம் இருக்க பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்களின் பாதுகாப்புகளுக்கான ஏற்பாடுகள் ஓரளவு செய்யப்பட்டிருந்தாலும் பல மையங்களில் அவை முழுமையாக இல்லை என்றும் குறிப்பாக விடைத்தாள்கள் திருத்தும் மையங்களுக்கு ஆசிரியர்கள் சென்றுவருவதற்கு உரிய போக்குவரத்து வசதிகள் பள்ளிக் கல்வித்துறை உறுதி அளித்திருந்தபடி பல மாவட்டங்களில் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்துள்ளது.

அரசு இந்தப் பிரச்னையில் அதிக கவனம் செலுத்தி, எதிர்வரும் பத்தாம் வகுப்புகள் தேர்வுகளை நடத்துவதற்கு முன்பு ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் நம்பிக்கை பெறும் அளவுக்கு, விடைத்தாள்கள் திருத்த மையத்திற்கான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details