தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10% உள்ஒதுக்கீடு பரிந்துரையை 7.5% ஆக குறைத்தது ஏன்?" - தங்கம் தென்னரசு - உள்ஒதுக்கீடு பரிந்துரை

சென்னை:மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் குழு பரிந்துரைத்தும், அதனை 7.5 சதவீதமாக குறைத்தது ஏன் என்பதற்கான காரணத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக அறிவிக்க முடியுமா என தங்கம் தென்னரசு எம்எல்ஏ கேள்வி கேட்டுள்ளார்.

Reservation
Reservation

By

Published : Nov 20, 2020, 12:54 PM IST

இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை எல்லா வகையிலும் சீர்குலைப்பதில் முன்னணி வகித்துவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏதோ அவரால்தான் தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்கான கனவு நிறைவேறி வருவதைப்போல, தான் போகும் இடம் எல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டு இருக்கின்றார்.

நீட் தேர்வைத் தமிழ்நாட்டிற்குள் அனுமதித்துவிட்டு; இனி-செட் (INI-CET) தேர்வு குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் வாய்மூடி மெளனியாக இருந்து, தன் பதவி சுகத்தை மட்டும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் காவு கொடுக்கத் துணிந்து விட்ட அவர் தான்தான் மாணவர்களின் ரட்சகன் போலப் பேசுவது நகைப்பிற்குரியது.

தமிழ்நாட்டில் பயிலும் மாணவர்களில் ஏறத்தாழ 40 சதவீதம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் என்ற நிலையில், ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையிலான குழு மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டை 10 சதவீதமாக வரையறுத்துப் பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையினைக் கூட அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதை 7.5 சதவீதமாகக் குறைத்தது யாருடைய அரசு என்பதைத் எடப்பாடி பழனிசாமி சொல்லத் தயாரா?

என்ன அடிப்படையில் இவ்வாறு குறைக்கப்பட்டது; அதன் காரணம் என்ன என்று சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் எழுப்பப்பட்ட குரல்களுக்கு எந்தவிதமான பதிலையோ அல்லது விளக்கத்தையோ இன்றுவரை அரசு வெளிப்படையாகத் தெரிவிக்காததன் மர்மம்தான் என்ன?

அவ்வாறு 7.5 சதவீதமாகக் குறைத்ததன் காரணமாக இன்னும் ஒரு 100 மாணவர்கள் கூடுதலாக மருத்துவப் படிப்புகளில் இடம் பெறும் வாய்ப்பைத் தட்டிப் பறித்தது, இன்று வெட்கம் ஏதும் இல்லாமல் வீண் பெருமை பேசிக்கொண்டு, வினா எழுப்பும் செய்தியாளர்களிடம் வீராப்புக் காட்டிவருகிறார் முதலமைச்சர்.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குப் பெறுவதில் படுதோல்வி அடைந்தது மட்டுமல்லாமல் மறைமுகமாக மத்திய பாஜக அரசோடு இணைந்து அதற்குப் பட்டுக் கம்பள வரவேற்பையும் அளித்து விட்டு இன்றைக்கு ஏழை - எளிய மாணவர்களுக்கு உதவி புரிய வந்த உத்தமர் எனப் பகல் வேஷம் போடும் முதலமைச்சரின் முகத்திரை கிழிந்து தொங்குவதையும்; அதன் உள்ளே தெரியும் துரோக முகம் அவர்களை யார் என்று தெளிவாகவே அடையாளப்படுத்துவதையும் மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றார்கள்.

எனவே, அரசு உதவி பெறும் பள்ளிகள் எல்லாம் தனியார் பள்ளிகள் என்பது போன்ற புதிய, அரிய கண்டுபிடிப்புகளை அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் முதலமைச்சர் இனியாவது ஏன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு 7.5 சதவீதமாக் குறைக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வேண்டுகின்றேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details