தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Thandatti: பாட்டிகளுடன் கோலாகலாக நடந்த 'தண்டட்டி' டிரைலர் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ள தண்டட்டி படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 6) மாலை சென்னை தி.நகரில் நடைபெற்றது.இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் மற்றும் ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.

By

Published : Jun 7, 2023, 3:47 PM IST

பாட்டிகளுடன் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா!
பாட்டிகளுடன் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா!

சென்னை:கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளார்கள்.

இந்தப்படத்திற்கு K.S. சுந்தரமூர்த்தி இசையமைத்து, கலையை வீரமணி மற்றும் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தின் படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். இந்த படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 6) மாலை சென்னை தி.நகரில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அனைவரையும் வரவேற்று பேசிய தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசுகையில், ”இயக்குநர் ராம் சங்கையா கதை சொன்ன உடனே இந்த படம் பண்ண வேண்டும் என முடிவெடுத்து விட்டேன். மண்வாசனை கலந்த கதை. அதில் உள்ள உண்மைத்தன்மை மற்றும் அவர் பார்த்து வளர்ந்த நிகழ்வுகளை கொஞ்சம் கற்பனையில் சேர்த்து புனைவு கதையாக உருவாக்கி உள்ளார். இந்த கதைக்கு நாங்கள் முதலில் நினைத்த நடிகர் பசுபதி. அவரே இந்த படத்தில் எங்களுடன் இணைந்தார். அதேபோல் தான் ரோகிணியும் வயதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேனியில் ஒரே கட்ட படப்பிடிப்பாக இதை நடத்தி முடித்துள்ளோம்.” இந்த படத்தில் நடித்துள்ள தண்டட்டி அப்பத்தாக்களால் படப்பிடிப்பே கலகலப்பாக இருந்தது என்றார்.

நடிகை அம்மு அபிராமி பேசும்போது, "இந்த கதையை இயக்குநர் சொன்னதும் நான் தான் இந்த படத்தில் நடிப்பேன் வேறு யாரையும் தேர்வு செய்யக் கூடாது என சொல்லி விட்டேன். இந்த படத்தில் கிராமத்தில் இவ்வளவு அப்பத்தாக்களுடன் நடித்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. பசுபதியின் மிகப்பெரிய ரசிகை நான். அவருடன் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி" என்று கூறினார்

நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது, "தங்கமான மனிதர்கள் சேர்ந்து தங்கத்தை பற்றி சொல்லி இருக்கும் படம் இது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இது எனக்கு இரண்டாவது படம். பசுபதியும் ரோகினியும் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்றதுமே உடனே இந்த படத்தின் நடிக்க சம்மதித்து விட்டேன். இதுவரை நான் பண்ணாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

ஒரு மோசமான குடிகாரன் கதாபாத்திரம் எனக்கு, இதற்காக தாடி வளர்க்க வேண்டும் என என்னிடம் கூறினார் இயக்குநர் ராம் சங்கையா. ஆனால் அப்போது கிளீன் ஷேவ் செய்திருந்தேன். ஆனாலும் இயக்குநரிடம் குடிகாரன் என்றால் தாடி வைத்து தான் இருக்க வேண்டுமா, எங்கள் ஊரில் கிளீன் ஷேவ் செய்த ஒரு நபர் தினசரி காலையிலேயே குடிக்க வந்து விடுவார் என்று கூறி அவரை கன்வின்ஸ் செய்து இந்த கதாபாத்திரத்தை அவரிடம் இருந்து பிடுங்கி நடித்தேன்" என்று கூறியுள்ளார்.

இயக்குநர் ராம் சங்கையா பேசுகையில், “இந்த கதையை கேட்டதுமே தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் உடனே ஓகே செய்தார். எந்த பிரச்சினை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என ஊக்கம் கொடுத்தார். எனக்கு இது ஒரே ஒரு படம் தான். ஆனாலும் அந்த சமயத்தில் அவர் பல படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வந்தாலும் கூட ஒவ்வொரு படத்திற்கும் என தனித்தனி கவனம் ஒதுக்கி அனைத்தையும் நினைவில் வைத்து அதுகுறித்து பேசும்போது ஆச்சரியமாக இருக்கும். நான் நேசிக்கும் நடிகர்களில் பசுபதியும் ஒருவர். இந்த படத்திற்கு நான் மம்முட்டி அல்லது பசுபதி என இரண்டு பேரை மட்டுமே மனதில் வைத்திருந்தேன்.

இந்நிலையில், மம்முட்டியை பிடிக்க முடியவில்லை. ஆனால் எனக்கு பசுபதி கிடைத்து விட்டார். ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு விஷயத்திற்காக நடிக்க கூடியவர்கள். ஆனால் பசுபதி திரைக்கதைக்காக நடிப்பவர். கலைத்துப் போடப்பட்ட இந்த படத்தின் திரைக்கதையில் நேர்கோடான நடிப்பை அவர் வழங்கியுள்ளார். அவர் நடித்த படங்களில் மிகச்சிறந்ததாக இந்த தண்டட்டி இருக்கும்” என பூரிப்புடன் பேசினார்.

மேலும், ஒரு படத்தில் வடிவேலு சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என காமெடி செய்திருப்பார். அதுபோல இந்த படத்தில் நடிகை ரோகிணி பிணமாக அமர்ந்தபடி மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அவரை சுற்றி இருப்பவர்கள் வெவ்வேறு விதமான நடிப்பு, கூச்சல் என்று இருந்தாலும் சில இடங்களில் நான் கட் சொல்ல மறந்து விட்டாலும் கூட அவர் மூச்சை பிடித்துக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே கவனம் கொண்டிருந்தார்.

நடிகர் பசுபதி பேசும்போது, "சார்பட்டா பரம்பரை முடிந்ததும் இந்த கதை கேட்டேன். கேட்கும்போதே க்யூட் ஆக இருந்தது. எனக்கு எப்போதுமே எனது பாட்டியின் தண்டட்டி மீது ஒரு காதல் இருந்தது. சிறுவயதில் அவர்கள் அணிந்திருந்த தண்டட்டியை சுட்டு விடலாம் என பல நாட்கள் முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. அவர் மறைவுக்கு பின் தான் கிடைத்தது. இந்த ஒன்றரை மாத படப்பிடிப்பு நாட்களில் பாட்டிகளின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. இந்த ஜேனரில் இவ்வளவு எளிதாக சமீபத்தில் யாரும் கதை சொன்னது இல்லை என்றார்.

இந்த நிகழ்விற்கு படத்தில் நடித்த அனைத்து தண்டட்டி அப்பத்தாக்களும் வருகை தந்திருந்தனர். விழா நிகழ்வின் இறுதியில் இந்த படத்தின் டிரைலரை பசுபதி வெளியிட பாட்டிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெற்றுக்கொண்டனர். குழுக்கல் முறையில் பாட்டிகளின் பெயர் எழுதப்பட்டு அதில் ஒருவர் தேர்வுச்செய்யப்பட்டு அவருக்கு ஒன்றரை பவுன் தண்டட்டி பரிசாக வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல அனைத்து பாட்டிகளுக்குமே விலை உயர்ந்த பரிசுகளும் தயாரிப்பாளரால் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: விழுப்புரத்தில் 'தீண்டாமை' விவகாரம்.. மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைப்பு!

ABOUT THE AUTHOR

...view details