தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு மாதத்தில் டெட் தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை! - ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை ஒரு மாதத்தில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

tet-exam-result

By

Published : Jun 9, 2019, 1:11 PM IST

தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான 2ஆம் தாள் எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு இன்று தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் ஆசிரியர் தகுதித் தேர்வினை, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் வெங்கடேஷ், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் வெங்கடேஷ், “ஆசிரியர் தகுதித்தேர்வு 2019ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்வினை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு நேற்று(ஜீன் 8) 470 மையங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 455 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 321 தேர்வர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வு 2ஆம் தாள் எழுதுவதற்கு நான்கு லட்சத்து 21 ஆயிரத்து 815 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான தேர்வுகள் 1,081 மையங்களில் நடைபெற்று வருகின்றன. தேர்வினை எழுதியவர்களின் விவரம் விரைவில் தெரியவரும். இதற்கான முன்னேற்பாடுகளை மூன்று மாதங்களாக செய்து வருகிறோம். மாவட்டத்திற்கு ஒரு சிறப்பு அலுவலர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தேர்வு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் வெங்கடேஷ்

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டிற்கு விழுப்புரம் மாவட்டத்தில் 67 மையங்களும், காஞ்சிபுரத்தில் 62 மையங்களும், சென்னையில் 60 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள், விண்ணப்ப கட்டணம் அனைத்தும் இணையதளம் மூலம் பெறப்பட்டது. எந்தவித தொய்வுமின்றி தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வுகள் முடிந்த பின்னர் ஒரு மாதத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என அவர் தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்றினை 33 ஆயிரத்து 474 ஆண்களும், ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 935 பெண்களும், ஆறு திருநங்கைகளும் எழுத விண்ணப்பித்திருந்தனர். அதேபோல் ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாளை 15 ஆயிரத்து 796 ஆண்களும், 3 லட்சத்து 25 ஆயிரத்து 146 பெண்களும்,15 திருநங்கைகளும், 5,601 மாற்றுத்திறனாளிகளும் எழுதுவதற்கு பதிவு செய்திருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details