சென்னை: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று(ஜன.2) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி இருந்த நேரத்தில், கரோனா நோய் சிகிச்சைப் பிரிவில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு எழுதி காத்திருப்பில் இருந்த செவிலியர்களில், தமிழ்நாடு அரசு கடந்த 2020ஆம் ஆண்டு, 14ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் சுமார் 2, 400 செவிலியர்களுக்குப் பணி வழங்கி உத்தரவிட்டது.
அவர்கள் கரோனா தொற்று தீவிரமாக இருந்த காலத்தில் இரண்டரை ஆண்டுகள், தங்களது உயிரை பணயம் வைத்து, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கினர். தங்களது குடும்பத்தைக் கூட கவனிக்க முடியாமல், பல்வேறு சிரமங்களுக்கு இடையே செவிலியர்கள் ஆற்றிய சேவை மகத்தானது.
இந்த நிலையில், கரோனா காலத்தில் மகத்தான சேவை ஆற்றிய செவிலியர்கள் பணி நீக்கம் என்ற அரசாணை மிகுந்த வலியையும், வேதனையையும் அளிக்கிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை, மாவட்ட சுகாதாரக் குழுமத்தின் கீழ் தற்காலிக பணியாளர்களாக பணி அமர்த்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.