சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகனும் தெலங்கானாவின் தொழில்துறை அமைச்சருமான கே.டி.ராமராவ் மற்றும் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர், தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் குடும்பத்தினரும் ஸ்டாலின் குடும்பத்தினரும் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
பல முக்கிய தேசிய நடப்புகள் குறித்து ஆலோசனை நடந்ததாகத் தகவல்:
இந்தச் சந்திப்பில் தேசிய அரசியல் மற்றும் இரு மாநில நல்லுறவு தொடர்பாக இரண்டு முதலமைச்சர்களும் பேசி உள்ளதாகவும் தெரிகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெலங்கானா முதலமைச்சரிடம் கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பு தொடர்பாக பேசியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தேசிய அளவில் வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னெடுப்பில் மூன்றாவது அணி அமைவதற்கான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் மாநிலக் கட்சிகள் ஒன்றாக இணைந்து ஒரு மிகப்பெரிய கூட்டணியை அமைக்கவும் திட்டமிட்டுள்ள சூழலில், இது தொடர்பாக இரண்டு மாநில முதலமைச்சர் சந்திப்பு நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது.
அதேபோல், மத்திய அரசுக்கும், சந்திரசேகர் ராவ் அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இந்தச் சந்திப்பு நடைபெற்று உள்ளது
தேசிய அளவில் பாஜக., மற்றும் காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை அமைப்பது தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் மு.க.ஸ்டாலினை சந்திரசேகர் ராவ் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:VALIMAI UPDATE - பைக் வீலிங் செய்து அசத்திய அஜித்