முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை பார்வையிட்ட தெலங்கானா அரசு அதிகாரிகள் சென்னை:தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குச் செயல்படுத்தப்பட்டுள்ள, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து அறிந்துகொள்வதற்காக, தெலங்கானா மாநில முதலமைச்சரின் செயலாளர் ஸ்மிதா சபர்வால் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 31) ஆய்வு செய்தனர்.
தமிழ்நாட்டில், அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக, உணவு அருந்தாமல் பள்ளிக்கு வருகின்றனர் எனவும், அதனால் அவர்களின் உடல் நலன் பாதிக்கப்படுவதாகவும், பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, 'முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்' கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி கொண்டுவரப்பட்டது. இந்த திட்டமானது கடந்த 25ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் 31,008 பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தால் சுமார் 18 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இத்திட்டத்தை தெலங்கானாவில் அமல்படுத்துவது தொடர்பாக அந்த மாநில முதலமைச்சர் செயலாளர் ஸ்மிதா சபர்வால், பழங்குடியின நலத்துறை அரசு செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று ஆய்வு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, உணவு தயாரிக்கும் முறை, அதனைப் பள்ளிகளுக்குக் கொண்டு செல்லும் முறை மற்றும் மாணவர்களுக்கு உணவு பரிமாறப்படும் விதம் குறித்து தெலங்கானா மாநில அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். மேலும், சென்னை ராயபுரம் ஜிசிசி பழைய பள்ளி கட்டடத்தில் உணவு தயாரிக்கும் முறையைப் பார்வையிட்ட அதிகாரிகள், ராயபுரம் ஆர்த்தூன் சாலையில் உள்ள மாநகராட்சி உருது தொடக்கப் பள்ளிக்குச் சென்று உணவு பரிமாறப்படுவதை பார்வையிட்டனர்.
இந்நிலையில், முதலமைச்சர் காலை உணவுத்திட்டம் குறித்து, தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி இளம்பகவத், தெலங்கானா அரசின் குழுவுக்கு விளக்கமளித்தார். இக்குழுவில் தெலங்கானா மாநில முதலமைச்சரின் செயலாளர் ஸ்மிதா சபர்வால், பழங்குடியினர் நலத் துறை அரசுச் செயலாளர் டாக்டர். கிறிஸ்டினா, கல்வித்துறை செயலாளர் கருணா வக்காட்டி, முதலமைச்சரின் சிறப்புப் பணி அலுவலர் ப்ரியங்கா வர்கீஸ், பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் துறை சிறப்புச் செயலாளர் பாரதி ஹொல்லிக்கேரி உள்ளிட்டோர் இருந்தனர்.
தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையைக் குறைத்தல் உள்ளிட்டவைகளை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ISRO: நிலவில் கந்தகம் இருப்பதை மீண்டும் உறுதி செய்தது பிரக்யான் ரோவர் - இஸ்ரோ தகவல்!