காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து பாஜகவில் அரசியல் பழகியவர் தமிழிசை. 2014ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு பாஜக தலைவராக பதவி வகித்து வரும் இவர், மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி, நீட் தேர்வு, பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக எழுந்த கருத்துகளுக்கு அவரே முன் வந்து விளக்கமளித்தார்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுவாக ஆளுநர் பதவி பழுத்த அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்படுவதுதான் வழக்கம். ஆனால், தமிழிசை செளந்தரராஜனுக்கு ஆளுநர் பதவி கொடுத்து பாஜக அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தனது ட்விட்டரில், ‘பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் அன்புச் சகோதரிக்கு அன்பு வாழ்த்துகள். அடித்தட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புகளை தமிழிசை பாதுகாப்பார் என நம்புகிறேன்' என்றும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
கனிமொழி வாழ்த்து, 'தமிழிசை கடும் உழைப்பாளி, தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு அன்பு வாழ்த்துகள், அம்மாநில மக்களுக்காக அவர் சிறப்பாகப் பணியாற்றுவார் என நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
கி.வீரமணி வாழ்த்து, 'ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அன்பு மகள் தமிழிசைக்கு மனம் நிறைந்த' வாழ்த்துகள். இவரைத்தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த், டிடிவி தினகரன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தலைவர்களின் வாழ்த்து மழையால் தமிழிசை செளந்தரராஜன் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.