தமிழ்நாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக, மாணவர்களை அமரவைக்க பள்ளிகளில் அதிகளவில் இடவசதி தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் 15க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வகுப்பறைகளில் வைக்கப்பட்டிருப்பதால், அந்த வகுப்பறைகளை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது பள்ளிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதுதவிர கூடுதலாக வரவழைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளன .
மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை யுபிஎஸ்சி போட்டித் தேர்வுகள் நடைபெற உள்ளன. மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு தரைதளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கப்பட வேண்டும்.
ஆனால், தரைத்தளத்தில் உள்ள வகுப்பறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருப்பதால், அந்த அறைகளை மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே, அதிகமான மாணவர்கள் கொண்ட பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் தேவை ஏற்பட்டுள்ளதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பள்ளிகளிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு தேர்தல் ஆணைய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:மறுபடியும் முதல்ல இருந்தா... இந்தியாவில் புதிய வைரஸ்