சென்னை: தொடக்கக்கல்வித்துறையில் சார்நிலைப் பணிகளின் சிறப்பு விதிகளில் 9ஆம் விதிகளில், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும் ஒர் அலகு என உள்ளதனை மாவட்ட முன்னுரிமை அல்லது மாநில முன்னுரிமை என மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்து, உரிய பரிந்துரையினை அரசுக்கு அளிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரைத் தலைவராகவும், உறுப்பினர்களாக தொடக்கக்கல்வித்துறை இயக்குநர், பள்ளிக்கல்வித்துறை பணியாளர் தொகுதி இணை இயக்குநர் நியமனம் செய்யப்பட்டனர்.
பள்ளிக்கல்வித்துறையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாநில முன்னுரிமை என்ற நடைமுறை பின்பற்றி பதவி உயர்வு வழங்கப்படுகிறது. தொடக்கக்கல்வி நிர்வாகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் முன்னுரிமை (Seniority) இதுநாள் வரை ஒன்றிய அளவில் கடைபிடிக்கப்பட்டது. இதனால் பதவி உயர்வு அந்த ஒன்றிய அளவில் மட்டுமே வழங்கக்கூடிய நிலையில் இருந்தது. இதன் காரணத்தால் மூத்த ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறாமல் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில், அவர்களுக்கும் இனி வரும் காலங்களில் மாநில முன்னுரிமை (State Seniority) அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.