சென்னை: பள்ளிக்கல்வித்துறைக்கு தேவையான தகவல்களை ஆன்லைன் மூலம் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் பதிவேற்றம் செய்ய முடியாது என தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்களின் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
மேலும், மாணவர்களின் கல்வித் தரத்தை பாதிக்கும் திமுக அரசு கொண்டுவந்த எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் (டிட்டோ ஜாக்) கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தி உள்ளது. கரோனா தொற்றினால் கற்றலில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் பாதிப்புகளை சரி செய்வதற்காக எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த திட்டத்தினால் மாணவர்களுக்கு சரியான முறையில் கற்பிக்க முடியவில்லை என ஆசிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறையால் கேட்கப்படும் தகவல்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய மட்டுமே தங்களின் நேரம் முழுவதும் செலவிடப்படுகிறது எனவும், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறையில் கற்றல் அடைவுத் திறன் சோதனை என்றப் பெயரில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வினால் கற்பிக்கும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி, எண்ணும் எழுத்தும் பயிற்சி போன்றவை அளிக்கப்படும் போது, ஈராசிரியர் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கற்றல் பணிகள் முற்றிலும் தடைப்படுவதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளிக்கல்வித்துறைக்கு புள்ளி விபரம் தரும் பணியில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், வரும் 13-ஆம் தேதி போராட்டமும் நடத்த உள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை முழுமையாக மேற்கொள்ள இயலாத வகையில் ஆன்லைன் பதிவேற்றங்கள் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி நேரத்தை அபகரித்து வருகிறது.