வட்டார கல்வி அலுவலர்களுக்கான கணினி வழித்தேர்வு வரும் 14 ,15, 16 ஆகிய தேதிகளில் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேலைகளிலும் தமிழ்நாடு முழுவதும் 57 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வினை 24 ஆயிரத்து 420 ஆண் தேர்வர்கள், 40 ஆயிரத்து 266 பெண் தேர்வர்கள், 22 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த தேர்வர்கள் என சுமார் 64 ஆயிரத்து 710 தேர்வர்கள் எழுதவுள்ளனர்.
இந்தத் தேர்விற்கான அறிவிப்பில் வெளியிடப்பட்டது போல கணினி மூலம் மட்டுமே தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வுப் பணியினை மேற்கொள்ள கண்காணிப்பு அலுவலர்களாக இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30 முதன்மை கல்வி அலுவலர்கள், 57 மாவட்ட கல்வி அலுவலர்கள், 57 மூத்த தலைமை ஆசிரியர்கள், 57 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணிபுரிய உள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள ஹால் டிக்கெட்டில் தேர்வர்களுக்கான விதிமுறைகளை குறிப்பிட்டுள்ளது. அதில் “ஆன்லைன் மூலம் மட்டும் பதிவிறக்கம் செய்யப்படும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் தவறுகள் இருந்தால், உடனடியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர், செயலாளரை தொடர்புக் கொண்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு எந்தவிதமான வேலைவாய்ப்பிற்கும் உத்தரவாதமாகாது. தேர்வு நடைபெறும் மாவட்டம், தேர்வு மையம் உள்ளிட்டவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடப்பு கொள்கையின் அடிப்படையில் ரேண்டம் முறையில் ரகசியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அளிக்கப்படும்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையம் மாற்றம் செய்து அளிக்கப்படாது. தேர்வு மையத்திற்குள் ஹால் டிக்கெட் இல்லாமல் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வர் சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் (தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் இருக்கும் புகைப்படத்துடன் கண்டிப்பாக ஒற்றுமையாக இருக்க வேண்டும்) . புகைப்படம் ஒற்றுமையாக இல்லாவிட்டால் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். வாக்களர் அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு ஆகியவற்றில் தேர்வர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்.
இந்த அடையாள அட்டையில் ஏதும் இல்லாவிட்டால், கண்டிப்பாக அனுமதிக்கப்படாமாட்டார்கள். காவல்துறையினர் அல்லது பாதுகாப்புப் பணியில் இருப்பவர்கள் சோதனை செய்த பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையத்தில் நகைக்கு அனுமதி கிடையாது. தேர்வு மையத்திற்குள் செல்போன், தகவல் தொடர்பு சாதனங்கள், மைக்ரோ போன் உள்ளிட்ட எந்தவிதமான மின்சாதனப் பொருட்கள், கால்குலேட்டர், பேஜர், டிஜிட்டல் டைரி, எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவைகள் கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. இந்த பொருட்களை தேர்வு மையத்தில் வைப்பதற்கும் அனுமதி கிடையாது.