சென்னை: தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய கட்டுமான நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுப்பணித்துறை கட்டுமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், இன்று காலை முதல் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான சுமார் 80க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போல் கட்டுமான நிறுவனங்களான காசா கிராண்ட் மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான கார்பெட் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சென்னை புரசைவாக்கம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அமித் என்பவர் இல்லத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.