கரோனா தொற்று பாதிப்பு காரணமாக, தமிழ்நாடு முழுவதும் சென்ற மார்ச் மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனையடுத்து மே 7ஆம் தேதி முதல் சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு அனுமதி வழங்கியது. ஆனால், சென்னையில் நோய்த் தொற்றின் தீவிரம் காரணமாக டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்தச் சூழலில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அரசு உத்தரவின்பேரில் சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகள் இன்று (ஆக.18) காலை முதல் திறக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் எதிர்பார்த்ததைவிட குறைவாகவே காணப்பட்டது. இருப்பினும், சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையத்துக்கு அருகேயுள்ள பகுதியில் அடுத்தடுத்து மூன்று டாஸ்மாக் கடைகள் உள்ளன. அந்தப் பகுதியில் மட்டும் மதுப்பிரியர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.