சென்னை:ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டம் தொடங்கி ஆறு மாதத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கி மின்வாரியம் சாதனை படைத்ததை தொடர்ந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு லட்சம் மின் இணைப்பு திட்டத்தின் கீழ் மின்சாரம் பெற்ற விவசாயிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி மூலம் இன்று (ஏப்ரல் 16) கலந்துரையாடினார்.
தஞ்சாவூர், மதுரை, வேலூர், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இத்திட்டத்தில் பயனடைந்த விவசாயிகள் காணொளி மூலம் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த கண்ணன்பிள்ளை என்ற விவசாயிக்கு ஒரு லட்சமாவது மின் இணைப்பு ஆணையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வழங்கினார்.
எதிலும் இலக்கு வைத்து செயல்படுபவர் செந்தில்பாலாஜி:தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர், "திமுக அரசு செய்த சாதனைகளை முதலமைச்சராக இருக்கக்கூடிய நான் சொல்வதை விட, இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்த விவசாயிகள் சொன்னதை கேட்டதில் மகிழ்ச்சியளிக்கிறது.
ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கி விட முடியுமா என்ற சந்தேகம் எனக்கும் இருந்தது. எதிலும் இலக்கு வைத்து செயல்படும் அமைச்சர் செந்தில்பாலாஜி, 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதிலும் இலக்கு வைத்து சிறப்பாக செயல்பட்டுள்ளார். அரசு அறிவிக்கும் திட்டத்தால் எத்தனை லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்பதை கவனிப்பதில் நான் கண்ணும் கருத்துமாக இருப்பேன்.
ஒரு லட்சம் மின் இணைப்பால் விவசாயிகள் குடும்பம் மட்டுமல்லாமல் வேளாண் உற்பத்தியில் தமிழ்நாடு அடைய இருக்கும் சாதனையையும் சிந்தித்து பார்க்க வேண்டும். திமுக ஆட்சியில் இருந்த போது, கடந்த 1990ஆம் ஆண்டு அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சார விநியோகம் வழங்க கலைஞர் உத்தரவிட்டார்.
- 2006 - 11ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 2.09 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது.
- 2010 - 11 ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 77,158 மின் இணைப்பு வழங்கப்பட்டது.
உழவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய அரசு: 2011-21 வரை 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் 2.21 லட்சம் இணைப்புகளே வழங்கப்பட்டுள்ளன. அதிலும் ஆண்டுக்கு, சராசரியாக 22 ஆயிரம் மின் இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 4.51 லட்சம் வேளாண் விண்ணப்பங்கள் மின் இணைப்பு கோரி பதிவு செய்யப்பட்டது. அதில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கவதற்கான திட்டம் செப்டம்பரில் தொடங்கி வைக்கப்பட்டது.
இன்று ஒரு லட்சம் பேர் இலவச மின் இணைப்பு பெற்றுள்ளனர். கரோனா, மழை போன்ற இடர்பாடுகளுக்கு மத்தியிலும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் ஓராண்டில் ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
உழவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய அரசு தற்போதைய அரசு. ஓராண்டில் ஒரு லட்சம் மின்சாரம் என்பது வரலாற்று சாதனை. இதற்கு காரணமாக இருந்த அமைச்சர் மற்றும் அலுவலர்களுக்கு என்னுடைய பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்." எனக் கூறினார்.
இந்தநிகழ்ச்சியில், மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்துக... ஓபிஎஸ்...