தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 29, 2021, 5:41 PM IST

ETV Bharat / state

தழல் ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசு நடத்திய தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்த தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட தழல் ஈகி முத்துக்குமாருக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி வீரவணக்கம் செலுத்தியது.

Tamizhaga Vazhvurimai Katchi Veera Vanakkam Muthukumar
தழல் ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சி

சென்னை: இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது. போரை நிறுத்த தனது உடலை எரித்து மாணவர்கள் போராட்டத்திற்கு வித்திட்டவர் முத்துக்குமார். அவரின் நினைவு தினத்தை தமிழீழ ஆதரவாளர்கள் அனுசரித்து வருகின்றனர். இந்தச்சூழ்நிலையில், ஐநா மன்றத்தில் இலங்கையில் நடந்துள்ள போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்றம் விசாரிக்கவேண்டும் என ஐநாவின் மனித உரிமைகள் தொடர்பான செயலாளர் நாயகம் தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கைக்கு இந்திய அரசு ஆதரவளிக்கவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழீழத்தில் 2008 - 2009ஆம் ஆண்டில், சிங்கள பேரினவாத அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரில், இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டனர். இப்படியான சூழலில், 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் தேதி ஈழத்தமிழர்களை காப்பாற்றக் கோரி முழக்கமிட்டு, தீக்குளித்தார் முத்துக்குமார்.

தழல் ஈகி முத்துக்குமாரை தொடர்ந்து பலரும் உயிர் நீத்தனர். தழல் ஈகி முத்துகுமார், ஒட்டுமொத்த தமிழர்களிடையே புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்த புதிய வகை போராளியாவார். முத்துக்குமார் உயிர் துறந்த இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த நிலையில், ஐ.நாவின் மனித உரிமைகள் தொடர்பான செயலாளர் நாயகம் அவர்கள், ஐ.நாவில் வரைவறிக்கை ஒன்றை தாக்குதல் செய்துள்ளார்.

அவ்வறிக்கையில், இலங்கை அரசு, அதன் நீதிமன்றம், அரசமைப்பு என எதுவுமே, மனித உரிமையை பாதுகாக்காது, பல்வேறு இன மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தவறியிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கையில் நடந்துள்ள போர்க்குற்றங்களை, இலங்கை அரசின் விசாரணையோ, நாட்டுக்குள் நடத்துகிற விசாரணைக்குழுவோ, எந்த நீதியையும் வழங்காது என்றும், நியாயத்தை வெளிப்படுத்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இலங்கையில் நடந்துள்ள போர்க்குற்றங்களை பன்னாட்டு நீதிமன்ற விசாரணையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை தொடர்பான செயலாளர் நாயகம், தனது அறிக்கையில் முன்மொழிந்துள்ளார். மனித உரிமை மன்றத்தின் தொடர்பான செயலாளர் நாயகம் அறிக்கை வரவேற்கதக்கது. இது முத்துக்குமார் தொடங்கி வைத்த போராட்டத்திற்கு வெற்றியாகவே தமிழக வாழ்வுரிமைக் கட்சி கருதுகிறது. எனவே, இந்தியா அரசு, சிங்கள பேரினவாதத்திற்கு துணை போகாமல், மனித உரிமை தொடர்பான செயலாளர் நாயகம் முன்மொழிந்த, சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான பன்னாட்டு விசாரணையை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

அப்படி தவறும் பட்சத்தில், ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டு தமிழர்கள், உலகத்தமிழர்கள் என ஒட்டுமொத்த தமிழர்களும், இந்திய அரசை தமிழின பகை அரசாக கருதக் கூடிய நிலை ஏற்படும் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். சிங்கள பேரினவாத அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரை நிறுத்தக் கோரி, தீக்குளித்து உயிரீகம் செய்த தழல் ஈகி முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வீரவணக்கத்தை செலுத்துகிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கர்நாடகாவிற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details