சென்னை:வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தென்இந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், இன்று (நவ-6) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி முதலிய 16 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இது குறித்து மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், “தென்இந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதைத் தொடர்ந்த கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழையும், அடுத்து வரும் நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழைக்கு வாய்ப்பு உள்ள இடங்கள்:
நாளை நவம்பர் 7 ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் நவம்பர் 8 ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.