சென்னை:பணி செய்யும் நேர்மையான அதிகாரிகளுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பிற்காக ஒரு தற்காப்பு பயிற்சி உடனடியாக அரசு வழங்கவும், தேவைப்படும்பட்சத்தில் கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில் தூத்துக்குடியில் கிராம அலுவலர் அலுவலகத்தில் பணியிலிருந்த விஏஓ லூர்து பிரான்சிஸ் படுகொலை (Tuticorin VAO Lourdes Francis murder) செய்யப்பட்டார். இது தமிழகத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படுகொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் விஏஓ குடும்பத்திற்கு அறிவித்தபடி, ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும், இதற்குக் காரணமான குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தங்கள் பாதுகாப்பிற்கு துப்பாக்கி கேட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கள் பாதுகாப்பிற்கு துப்பாக்கி கேட்கும் VAO-க்கள்: இது குறித்து தமிழ்நாடு விஏஓ சங்கம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் வைத்த கோரிக்கையில், ''தூத்துக்குடி முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளை சம்பந்தமாக நடைபெற்ற படுகொலை போன்றே மற்றொரு நிகழ்வாக, சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவில் உள்ள மானாத்தாள் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த வினோத்குமார், மணல் கடத்திய டிராக்டர், பொக்லைன் வாகனத்தைப் பிடித்ததால் அதே பகுதியைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட நபர்கள் மேற்படி கிராம நிர்வாக அலுவலரை வெட்டிக் கொலை செய்யும் நோக்கத்தில் விரட்டிய சம்பவம் நடைபெற்றது.
தற்காப்பு பயிற்சியுடன் கைத்துப்பாக்கி: இதைப் போன்று நடைபெறும் சம்பவங்களால், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அனைத்து வருவாய்த்துறை ஊழியர்கள் அனைவரும் அச்சத்தோடும் பாதுகாப்பற்ற நிலை இருந்த போதிலும், நேர்மையாக பணி செய்து வருகிறார்கள்.