சென்னை:பள்ளிக்கல்வித்துறையில் பகுதி நேர ஆசிரியர்களாக உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் போன்ற 8 பிரிவுகளில் சுமார் 12 ஆயிரம் பேர் 2012ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்களை நடத்தினர். ஆனால், அவர்களுக்கு தொகுப்பூதியத்தில் மட்டும் உயர்வு வழங்கப்பட்டது. பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
பகுதி நேர ஆசிரியர்கள் வேதனை: இந்த நிலையில், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை 25ஆம் தேதி முதல் துவக்கி உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள், “12 கல்வியாண்டுகளாக அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 16 ஆயிரத்து 459 பகுதி நேர ஆசிரியர்கள் முறையான நியமனத்தில் மாணவர்களின் பன்முகத் திறன்களை மேம்படுத்தும் வகையில் உடற்கல்வி, கணினி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் ஆகிய பாடப்பிரிவுகளில் 10,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறோம்.
12 ஆண்டாக பணி நிரந்தரப்படுத்த பலமுறை கோரிக்கை மற்றும் போராட்டங்கள் மூலம் வலியுறுத்தியும், பணி நிரந்தரப்படுத்தப்படாமல் வாழ்வாதாரத்தை இழந்தும், சமுதாயத்தில் மதிப்பிழந்த போதிலும், மாணவர் நலன் கருதி பணியாற்றி வருகிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்தனர். ஆனால், ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் கடந்தும் அதனை நிறைவேற்றவில்லை.
அரசாணை வெளியிடும் வரை போராட்டம்:கடந்த போராட்டத்தின்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வுடன், பி.எப் (PF), இஎஸ்ஐ (ESI) போன்றவையும் வழங்கப்படும் என அறிவித்தனர். ஆனால், அதுவும் இதுவரையில் வழங்கவில்லை” என்று வேதனையுடன் கூறுகின்றனர். பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவதற்கான அரசாணையை வெளியிடும் வரையில் தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக்கூறி 7வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.