இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா பேரிடர் காரணமாக ஊரடங்கு நான்காவது மாதத்தை எட்டியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், "ஊரடங்கிற்குள் ஒரு ஊரடங்காக" ஜூலை மாதம் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் "தளர்வுகள் இல்லா முழுமையான ஊரடங்கு" என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் இதே போன்று நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது பால் கிடைக்காது என்கிற எண்ணத்தில் முதல் நாளிலேயே மக்கள் கூடுதலாக பாலை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டனர். இதனால் பல்வேறு இடங்களில் செயற்கையான பால் தட்டுப்பாடு ஏற்பட்டது.
அதே நேரம் ஞாயிற்றுக்கிழமைகளில் பால் விற்பனையாகாமல் பால் முகவர்கள் அவதியடைந்தனர். தற்போது ஜூலை மாதம் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லா முழுமையான ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பால் முகவர்களின் கடைகளிலும், விநியோக மையங்களிலும் மட்டுமே காலை 9.00 மணி வரை பால் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் பால் முகவர்கள் முன்னேற்பாடுகளை செய்துள்ளனர்.
எனவே பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை பால் கிடைக்காது என எண்ணி முதல் நாளிலேயே (சனிக்கிழமை) கூடுதலாக பாலை வாங்கி இருப்பு வைத்து செயற்கையான பால் தட்டுப்பாடு ஏற்படவும், ஞாயிற்றுக்கிழமைகளில் பால் விற்பனையாகாமல் முகவர்கள் அவதியடையவும் காரணமாக வேண்டாம் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் பொதுமக்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:தோட்டத்திற்கு உரமாகும் மாம்பழங்கள்: உருக்குலைந்த விவசாயிகள்!